தேமுதிகவிற்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக!

வியாழன் மார்ச் 04, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக-தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது அதிமுக.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று ஒரே நாளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுள் பாமகவுடன் மட்டுமே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. தங்களுக்கும் பாமகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், 2011-ஆம் ஆண்டு கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருக்காவிட்டால், அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என கூறினார். சுதீஷின் இந்த பேச்சு சர்ச்சயை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், எல்.கே.சுதீஸ் அதிமுக கூட்டணியில் தொடரலாமா என்பது குறித்தும், தொடர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும், இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மிண்டும் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாளை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.