தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்!

புதன் மார்ச் 20, 2019

 தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து இருக்கிறார். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்து விட்டேன். தற்போது கட்சியின் துணைத்தலைவராக உள்ளேன். இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன். மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார்.