தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை!

திங்கள் செப்டம்பர் 09, 2019

தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகேயுள்ள கடல்பகுதியில் கவிழ்ந்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு சுமார் 4,000 ஹூன்டாய் கோல்விஸ், கியா ரகக் கார்களை ஏற்றிச்சென்ற குறித்த கப்பல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது கப்பலில் 24 பேர் இருந்துள்ளதாகவும், அதில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் 4 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன நால்வரும் இயந்திர அறையில் இருந்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் 13 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், 6 பேர் தென்கொரியர்கள் எனவும், ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான கப்பல் 6,900 கார்களைக் காவிச் செல்லக்கூடியது என்று தென்கொரிய கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.