டெங்கு பரவல்! சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை-

செவ்வாய் ஜூன் 28, 2022

சென்னை- டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வேகமாக பரவி வருவதால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

பருவமழை

தமிழ் நாட்டில் பருவமழை ஆரம்பித்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் ஒழிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விழிப்புணர்வு

மேலும் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக துண்டறிக்கை கொடுக்கப்பட்டு, வீட்டு மாடியில் தேங்கி இருக்கும் மழை நீரை எவ்வாறு அப்புறப்படுத்துவது, மழைநீர் தேங்காமல் இருக்க எவ்வாறு தடுப்பது போன்ற வழிமுறைகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் , அந்த துண்டறிக்கையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

டெங்கு பாதிப்பு

முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் இறுதி வரை தமிழ்நாட்டில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுற்றறிக்கை

இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

மழைப் பொழிவு

அதில், இந்த ஆண்டு சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொசுக்கள்

அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும். நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும். வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் கழிவுகளை அகற்ற அறிவுறுத்த வேண்டும்.

குடிநீர்

குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.