டென்மார்க்கில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

புதன் டிசம்பர் 01, 2021

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு டென்மார்க்கில் Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், மக்கள் திரள் திரளாக வந்து வணக்கம் செலுத்தினார்கள். தமிழீழ விடுதலைக்காய் வித்தானவர்களின் உணர்வுகள், இலட்ச்சியத் தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையுடன் புனித தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன.

மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி பின்பு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்படதை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் உத்தியோகபூர்வ அறிக்கை ஒலியலை மூலம் ஒலிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தி, முதன்மைச்சுடர் ஏற்றியவுடன்இ மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. சிறப்பாக அமைக்கப்பட்ட துயிலுமில்லத்தில் தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய எம் தேசப் புதல்வர்களின் கல்லறைக்கு மாவீரர்களின் குடும்ப உறவுகள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

மாவீரர் நாள் நிகழ்வில் எழுச்சியுரைகள், கவிதைகள், எழுச்சி நடனங்கள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்துபவையாக அமைந்துள்ளன. டென்மார்க் அரச மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார்கள்.

முன்னாள் மருத்துவப் போராளி தனது சிறப்புரையில், கள அனுபவங்களையும், மாவீரர்களது அர்ப்பணியையும் சொல்லியிருந்தார், அவர் உரையைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு மாவீரரும் ஆற்றிய களப்பணி, அவர்கள் தாய் மண்ணின் மீது வைத்திருந்த விடுதலைப் பற்றை உணரக்கூடியதாக இருந்தது.

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தனது உரையில் இன்றைய நாளில் மாவீரர்களை வணங்குவதோடு நின்று விடாமல், அவர்களின் கனவு நனவாக நாங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் அயராது செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, மாவீரர் நாள் மண்டபத்தில் இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள். மாவீரர்களின் தியாகம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை, அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமை இளையோரின் கையில் உள்ளது. அத்துடன் அவர்கள் தமிழீழம் என்ற இலக்கை அடையும் வரை அயராது செயற்பட வேண்டுமென இன்றைய நாளில் இளைய சமுதாயத்திடம் முன்வைக்கப்பட்டது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.