தெற்காசிய பாதுகாப்பிற்கு மேலதிக ஒதுக்கீடு

வெள்ளி ஜூன் 14, 2019

தெற்காசிய வலயத்தின் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த வருடம் தேவைப்படுவதாக இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு செனட் சபைக்கு அறிவித்துள்ளது.

இதன் ஊடாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன் , பாதுகாப்பை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு இராணுவங்களுக்காக நிதி செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தெற்காசிய டிஜிட்டல் உறவுகளை விரிவுபடுத்துதல் மற்றும் சைபர் பாதுகாப்புக்கு மேலும் 64 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்குவதற்கும் செனட் சபையிடம் இராஜாங்க திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.

2020 நிதியாண்டிற்காக அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு முன்னதாக ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் செனட் சபை ஆராயும்.

அதன் கீழ், தெற்கு மற்றும் மத்திய ஆசிய வலயங்கள் தொடர்பான செலவுகள் குறித்து இன்றைய தினம் விடயங்கள் கேட்டறியப்படவுள்ளன.

தெற்காசிய வலய அமெரிக்காவின் அபிலாஷைகள் என்ற தொனிப்பொருளில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பிரதம பிரதி உதவி செயலாளர் Alice G. Wells தனது கருத்தை செனட் சபையில் தற்போது சமர்ப்பித்துள்ளார்.

இந்திய – பசுபிக் – அமெரிக்க கொள்கை தொடர்பில் அவர் விடயங்களை முன்வைத்துள்ளதுடன், திறந்த வர்த்தக செயற்பாடுகள், இலவச போக்குவரத்து, ஜனநாயகம் மற்றும் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியன இந்த கொள்கையின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

உலக சனத்தொகையின் ஒரு பகுதியான இந்திய , பசுபிக் வலயங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், வலயத்தின் நீண்ட கால எதிர்காலத்திற்கும் இந்த கொள்கை முக்கியமானதாகும். இந்து, பசுபிக் வலயத்தின் ஊடாகவே உலகின் 70 வீத வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவின் இராஜதந்திர செயற்பாடுகள், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஊடாக தங்களின் சமுத்திரம் மற்றும் வான் மார்க்கத்தை பாதுகாக்க முடியும். அத்துடன், அமெரிக்காவின் நட்புறவு மற்றும் பங்காளர்களான இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் இந்து – பசுபிக் நாடுகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார சுயாதீன தன்மையை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும். அதன் ஊடாக சுதந்திரம் மற்றும் சௌபாக்கியத்தை எட்டக்கூடிய வழியை ஏனையவர்களின் பங்களிப்பின்றி அவர்களால் அமைத்துக்கொள்ள முடியும். ஒழுக்கம் மற்றும் ஜனநாயக பண்புகள் அற்றுப்போன, நிலையற்ற அடிப்படை வசதிகளின் ஊடாக சுமக்க முடியாத கடனால் எமது பங்குதாரர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு சீனா அல்லது வேறு நாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம். என Alice G. Wells குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தெற்காசிய வலயத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை மாத்திரம் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என கூறும் Alice G. Well, இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.