தேர்தல் களத்தில் ஈழத்தமிழருக்கான மாற்றுத் தெரிவு - கலாநிதி சேரமான்

செவ்வாய் மார்ச் 24, 2020

முழு உலகமும் கொரனா கொல்லுயிரிக் கிலியில் ஆழ்ந்திருக்கும் இன்றைய சூழமைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களத்தை சிங்கள தேசத்தின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்ச திறந்து விட்டுள்ளார். இத் தேர்தலின் மூலம் தளம்பல் போக்கற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதை விட, அரசியலமைப்பில் நினைத்த மாத்திரத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பதின்மூன்றாவது திருத்தச் சட்டம், பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் ஆகியவற்றை அல்லது அவற்றின் முக்கிய சரத்துக்களை இல்லாதொழிப்பதற்கும் தேவையான மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதே ராஜபக்ச சகோதரர்களின் நோக்கமாகும். இதற்காகவே அதிபர் தேர்தல் நடந்து முடிந்து அதன் சூடு ஆறுவதற்குள் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை கோத்தபாய விடுத்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்ற கடந்த பதினொரு ஆண்டுகாலப் பகுதியில், மீகானின்றித் திசைதெரியாது கடலலைகளின் நீரோட்டங்களுக்கு ஏற்ப அங்கிங்கென தட்டுத் தடுமாறி அலைந்துழலும் கப்பலின் நிலையில் தான் இன்று ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. சிங்கள தேசத்தில் இன்று வீசிக் கொண்டிருக்கும் இனவாத அலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் சென்று ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்று எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ கூறினால், அதை விட ஏமாற்று வித்தை இருக்க முடியாது.

அதாவது இன்று சிங்கள தேசத்தில் ராஜபக்ச சகோதரர்களின் திசையில் வீசும் இனவாத அலை, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் திசையில் வீசிய சிங்கள - பெளத்த மேலாதிக்கவாத அலையைப் போன்ற ஒன்று தான். அத் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டில் ஏறி, நிறைவேற்று அதிபர் ஆட்சிமுறைமையை அறிமுகம் செய்ததும் ஜே.ஆர் கூறினார், ‘ஒரு ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர தான் நினைத்த அனைத்தையும் செய்வதற்கான அதிகாரத்தை நிறைவேற்று அதிபர் ஆட்சிமுறை தனக்குத் தந்திருப்பதாக.’ அதே நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழீழத்தை அமைப்பதற்கான மக்கள் ஆணையைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியால் நாடாளுமன்ற அரசியல் ஊடாக எதையுமே சாதிக்க முடியவில்லை.

11983ஆம் ஆண்டு பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஜே.ஆர் நிறைவேற்றும் வரை தமது நாடாளுமன்றக் கதிரைகளை இறுகப் பற்றிக் கொண்டு அமிர்தலிங்கமும், அவரது பரிவாரங்களும் அமர்ந்திருந்தது மட்டும் தான் அக்காலப் பகுதியில் அவர்கள் செய்த சாதனை எனக் கூறலாம்.

பின்நாட்களில் (1991ஆம் ஆண்டு) யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவில் வெளியிடப்பட்ட விழா மலரில் ‘இரண்டு தசாப்தங்களும் புலிகளும்’ என்ற தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையில் இதுபற்றிக் குறிப்பிடுகையில், நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடுவது பாலைவனத்தில் இருந்து எழுப்பும் குரல்களுக்கு ஒப்பானவை என்று தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எள்ளிநகையாடியிருந்தார்.

நாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்து இன்றும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. அதிலும் சிங்கள - பெளத்த மேலாதிக்கவாத அலை வீசும் இன்றைய சூழமைவில், சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைகளில் கொலுவிருப்பதன் மூலம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் எனக் கூறுவது கானல்நீரில் காகிதக் கப்பல் ஓட்டுவதற்கு ஒப்பான ஒன்று.

சரி, அப்படி என்றால் இத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் தமிழ் பிரதிநிதிகளால் எதையுமே சாதிக்க முடியாதா? அப்படி என்றால் இத் தேர்தலால் தமிழர்களுக்கு என்ன தான் பயன் உண்டு?

முதலாவதாக தமது நாடாளுமன்ற கதிரைகளைப் பயன்படுத்தித் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தமிழ் பிரதிநிதிகளால் வென்றெடுக்க முடியாது போனாலும், அக் கதிரைகள் வழங்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவர்கள் எடுக்கலாம்.

தமிழர் தாயகத்தில் இயங்கும் சகல அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஏதோ ஒரு விதத்தில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் போன்றோருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள். எனவே தமது நாடாளுமன்ற ஆசனங்கள் வழங்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து பதினொரு ஆண்டுகள் கடந்தும் மீள முடியாமல் உள்ள மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை நிறுவனமயப்படுத்தப்பட்ட முறையில் இவர்கள் முன்னெடுக்கலாம். இதன் அர்த்தம் தமது நாடாளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்திப் புலம்பெயர் தேசங்களில் இவர்கள் நிதி திரட்டலாம் என்பதல்ல. மாறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இவர்கள் எடுக்கலாம்.

தவிர தமிழர் தாயகத்தில் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான வேலை வாய்ப்பின்மைக்குத் தீர்வு காணுதல், இளைய தலைமுறையினர் மத்தியில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பாவனை, தெருச்சண்டியர் மனோபாவம், மதுவுக்கு அடிமையாகுதல், பெண்கள் - சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியயழுப்புவதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டங்களையும் தமது நாடாளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்தி இவர்கள் மேற்கொள்ளலாம்.

இறுதியாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்குப் பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழ் நீதி கிட்டுவதற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கும், தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குமான பரப்புரை நடவடிக்கைகளையும் அனைத்துலக அங்கீகாரம் பெற்ற தமது நாடாளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்தி இவர்கள் முடுக்கி விடலாம்.

கடந்த பதினொரு ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் தாயகத்திற்கான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே மேற்குறிப்பட்ட பணிகள் எவற்றையும் ஆற்றியதில்லை. தமது தனிப்பட்ட வருவாயைப் பெருக்குதல், சொத்துக் குவித்தல், தமக்கு நெருக்கமானவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து அதன் மூலம் தமது விசுவாசிகளின் வட்டத்தைப் பெருக்குதல் போன்ற பணநாயக நடவடிக்கைகளில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டார்கள்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒப்பான ஒன்றாக மாறி ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகி விட்டது. மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான தலைமையாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன், தான் முதலமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையை முதியோர் மடமாக மாற்றியமைத்து, அதற்கு சுவிற்சர்லாந்து உட்பட மேற்குலக நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட நிதியைத் திருப்பியனுப்பிய பெரும் சாதனையாளராகவே திகழ்கின்றார்.

இவ்வாறான பின்புலத்தில் நாடாளுமன்றக் களத்தில் ஈழத்தமிழர்களுக்கான மாற்றுத் தெரிவாகத் திகழ்வது மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் புதல்வரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அக் கட்சியுடன் கூட்டிணைந்து நிற்கும் தமிழ்த் தேசியப் பொது அமைப்புக்களுமே.

கடந்த பதினொரு ஆண்டுகளாக தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இனவழிப்பிற்கான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிய ஈழத்தமிழர்களின் வேணவாக்களைக் கொள்கைப் பிறழ்வு இன்றி முன்னிறுத்தும் இவர்கள், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவர்களாயின் அது 2009 வைகாசி 18இற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் கட்டவிழப் போகும் பூகம்ப மாற்றமாகவே அமையும்.

இவ்வாறான பூகம்ப அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவதா? அன்றி தமிழ்த் தேசிய அரசியலைக் கூட்டமைப்பின் பணநாயக அரசியலாக அல்லது விக்னேஸ்வரனின் வயோதிபர் மட அரசியலாக நீடிக்க வைத்து வீரியம் இழக்க வைப்பதா? என்பதைத் தாயக உறவுகளே தீர்மானிக்க வேண்டும்.

நன்றி: ஈழமுரசு