தேர்தல் பிரசாரத்துக்காக 3 பில்லியம் ரூபா!

வியாழன் ஜூலை 11, 2019

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்ட பிரசாரங்களுக்காக அரசாங்கம் சுமார் 3 பில்லியன் ரூபாவை அண்மித்த தொகையைச் செலவிடுவதற்குத் தயாராகி வருவதாக குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, இது குறித்த மேலதிக விபரங்களை எதிர்வரும் நாட்களில் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருதானையிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அரசாங்கம் சமுர்த்தியை வழங்கும் பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக மாத்திரம் சுமார் 4000 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிட்டிருக்கிறது. அதேபோன்று என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய செயற்திட்டங்களுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக 4925 இலட்சம் ரூபா கோரி அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

அவ்வாறு பிரசாரங்களுக்காக செலவிடும் நிதியிலும் மோசடி செய்வதற்கும், தமக்கு ஆதரவானவர்களுக்கு பிரசார வேலைத்திட்டங்களை வழங்குவதற்கும் முயற்சித்து வருவதை அறியமுடிகிறது. இதுகுறித்த தகவல்களையும் எதிர்வரும் வாரமளவில் ஆதாரபூர்வமாக வெளியிடுவோம். 

அரசாங்கத்தின் தேர்தலை மையமாகக் கொண்ட பிரசாரங்களை இலவசமாகச் செய்ய வேண்டும் என்று அரச ஊடகங்களை நிர்பந்திக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. இதனால் அரச நிறுவனங்கள் அனைத்தும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்குள்ளான குழப்பநிலை தற்போது உக்கிரமடைந்து இருக்கிறது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் வேட்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் அதிகாரத்திற்கு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதை விடுத்து, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எத்தகைய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.