தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞர் கைது!

வியாழன் நவம்பர் 14, 2019

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்திற் கொள்ளாது பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞரொருவர் தும்மலசூரிய காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தும்மலசூரிய - வீரகொடியான பகுதியில் இன்று வியாழக்கிழமை காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாதம்பை பகுதியின் பாடசாலை ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வருபவர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது சந்தேக நபரிடமிருந்து 155 துண்டு பிரசுரங்களும் , 30 கடித உரைகளும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. தும்மலசூரிய பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

 அத்துடன் தேர்தலுக்கு முன்னரான இந்த இரு தினங்களிலும் எந்தவித பிரச்சார நடவடிகைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.

அதேவேளை இவ்வாறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.