தேர்தல்கள் சீர்திருத்தம் மற்றும் முறைமைகள் தொடர்பான பரிந்துரைகள்

சனி ஜூலை 17, 2021

 தேர்தல்கள் சீர்திருத்தம் மற்றும் முறைமைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளை இது தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரியிருந்தது. அதற்கமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி தனது பரிந்துரைகளை நேற்று முன்தினம் சமர்பித்துள்ளனர்.

 ஜனாதிபதி தேர்தல், நாடாபாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தல் ஆகியவற்றில் தற்போதுள்ள தேர்தல் முறையினை வலியுறுத்தியும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் சிறிய மாற்றங்களை குறிப்பிட்டும் சமத்துவக் கட்சி தனது தேர்தல் சீர்திருத்த பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

 இது தொடர்பில் அக் கட்சி  சமர்பித்துள்ள முழுமையான பரிந்துரைகள் வருமாறு

 தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்கள் மற்றும் அவசியமான திருத்தங்கள் தொடர்பான சமத்துவக்கட்சியின் பரிந்துரைகள் 

 அறிமுகம் 

 நாட்டின் அனைத்து மக்களினதும் உண்மையான பிரதிநிதியாக, பொறுப்பு, கண்ணியம், நம்பிக்கை, சமத்துவம், சமூகப் பாதுகாப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றம் செயற்பட வேண்டும். 

 நமது இந்தச் சிறிய நாடானது 1948 இல் சுதந்திரமடைந்த பின்னர் உள்நாட்டில் விளைந்த அரசியல் முரண்பாடுகளின் விளைவாக 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை இழந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அனைத்துச் சமூகங்களிலும் அவயங்களை இழந்து அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் உருவாக்கப்படும் தேர்தல் முறைமையும் தேர்தல் சட்டங்களும் அதன் ; பின்னர் உருவாகும் ஆட்சியும் அரசியற் சூழலும் அரசியலமைப்பும் நேர்மையானதும் உறுதியுமான நல்லிணக்கத்தையும் அரசியற் சுமுக நிலையையும் நம்பிக்கையையும் எட்டுவதாக இருக்க வேண்டும். 

 இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையும் நோக்கு நிலையும் அவசியமாகும். இந்தப் பன்மைத்துவம் என்பது சமநிலைப் பண்புடையதாக  அனைவருக்குமான உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இலங்கையின் பல்லினச்சூழல் என்பது சமநிலைத் தன்மையுடையது அல்ல. அது இனரீதியான சனத்தொகை விகிதத்தில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆனால் நீதியானது ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்க முடியாதது. ஆகவே நேர்மையும் நியாயமும் அனைத்துத் தரப்பினருக்கும் உரிய சமத்துவமுமான ஆட்சி அதிகார நடைமுறையைத் தோற்றுவிக்கும் வகையில் தேர்தல் சட்டங்களும் அவசியமான திருத்தங்கங்களும் அமைதல் வேண்டும். 

 குறிப்பாக சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவமானது இன ரீதியான அடிப்படையில் ஒதுக்கப்படும் ஆசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுவது அவசியம். அல்லது அவர்கள் தமக்கான ஆசனங்களைப் பெறக்கூடிய தேர்தல் முறைமை - தேர்தல் சட்ட ஏற்பாடுகளின் வழிமுறைகளின் ஊடாக பெறும் ஆசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜேர்மனி, இந்தியா, பாகிஸ்தான், கொலம்பியா, குரோஸியா, அல்பினியா, தாய்வான் போன்ற நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இது ஏனைய சமூகத்தினரிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பி நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழியேற்படுத்தும். பதற்றத்தைக் குறைக்கும். 

 வாக்காளர் பதிவு 

 வாக்காளர் பதிவானது தேர்தல் செயற்பாட்டில் ஒரு முக்கியமான விடயமாகும். இதில் முரண்பாட்டுக் காலகட்டத்தில் தமது வதிவிடங்களை விட்டு இடம்பெயர்ந்த எல்லா நபர்களும் பதிவு செய்யப்படுகின்றனர் என்பதை உறுதி செய்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்து வாழ்வோர், இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், வேறு நாடுகளில் உள்ள இலங்கை அகதிகள் ஆகியோர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் (UNHCR குறித்த நாடுகளின் அரசாங்கங்கள், இலங்கைத் தூதுவராலயங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புப் பெறுவது அவசியமாகும். இவர்களுக்கு இலங்கை அரச ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு முறைமையைப் பின்பற்றுவதை நடைமுடைப்படுத்தலாம். 
 தேர்தல்கள் முறைமைகளில் பொருத்தமான திருத்தங்களை இனங்காணல் மற்றும் அவசியமான திருத்தங்களைப் பரிந்துரைத்தல் 

 1. ஜனாதிபதித் தேர்தல் முறைமை 


 தற்போதுள்ள தேர்தல் முறைமையை அப்படியே தொடருவதே பொருத்தமானது. 

 2. நாடாளுமன்றத் தேர்தல் முறைமை 

 தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார முறைமையே பொருத்தமானதும் அனைத்துத் தரப்பினருக்கும் இடமளிக்கும் வகையில் உள்ளதுமாக இருப்பதால் அதைத் தொடருவதே நல்லது. இதுவே ஆகக்கூடிய அளவில் ஜனநாயக ரீதியிலான பிரதிநிதித்துவத்துக்கான இடத்தை வழங்குகிறது. பல்வேறு தரப்பினரினதும் பாராளுமன்றத்தில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பையும் இதுவே அளிக்கிறது.

 இதில் வெட்டுப்புள்ளி முறைமையை ஐந்து (05) வீதத்திலிருந்து மூன்று வீதத்துக்கு மாற்றியமைப்பது பொருத்தமாக இருக்கும். 

 3. மாகாணசபைத் தேர்தல் முறைமை 

 மாகாணசபை தேர்தல் முறைமையானது, பழைய முறைமையில் 100 வீதமும் விகிதாசார அடிப்படையில் நடத்தப்படுவதே பொருத்தமாகும். இந்தத் தேர்தல் முறைமையானது, ஒவ்வொரு தேர்தல் செயலகங்களும் உச்சபட்சமாக ஐந்து மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்யக் கூடிய உப தேர்தல் செயலகங்களின் வழியாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவும் தெரிவு செய்யவும் கூடிய தேர்தல் முறைமையின் வழியான ஏற்பாடுகளைச் சட்டமாக்க வேண்டும். இதற்கமைவாக தேர்தல் உப செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

 இதன் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் குறித்த பிரதேச மக்களுக்குப் பொறுப்புச் சொல்லக் கூடிய நிலை உருவாகும். மக்களும் தங்கள் பிரதிநிதிகளை தெளிவாக அடையாளம் காணவும் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பாகும். 


 மாகாணசபைத் தேர்தலின்போது ஒவ்வொரு மாகாணசபையிலும் பெண்களுக்குரிய இடமானது குறைந்தது 25 வீதமான பிரதிநிதிகள் இடம்பெறும் வகையிலான பொறிமுறையை வகுத்தல் அவசியமானதாகும்.

 4. உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல்

 1. தற்போது உள்ள தேர்தல் முறைமை (60 வீதம் வட்டார ரீதியாகவும் 40 வீதம் விகிதாசாரமும்) ஏற்புடையது. இதில் 25 வீதமாக உள்ள பெண்களுக்குரிய வீதம் 30 ஆக உயர்த்தப்படுவதுடன், மொத்த வட்டாரங்களில் 20 வீதமான வட்டாரங்கள் தனியே பெண்கள் மட்டுமே போட்டியிடக்கூடியதாக ஒதுக்கப்பட வேண்டும். இந்த வட்டாரங்கள் சுழற்சி முறையில் தேர்தல் காலங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

 2. மாவட்டத்துக்கு ஒரு பிரதேச சபை கட்டாயமாக பெண் தலைமைத்துவத்தைக் கொண்டதாக இயங்கும் வகையில் தேர்தல் முறைமையில் இடமளிக்கப்படுவது அவசியம். 

 தேர்தல் சட்டங்களில் பொருத்தமான திருத்தங்களை இனங்காணல் மற்றும் அவசியமான திருத்தங்களைப் பரிந்துரைத்தல் 

 தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை ஏற்றுக் கொண்டு பின்வரும் பொருத்தமான சீர்திருத்தங்களை முன்மொழிகிறோம்

 1. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுயாதீனக் குழுக்களைச் சேர்ந்தோர், தேர்தல் காலத்தில் பகிரங்கமாகவே கட்சிசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, தேர்தல் வேளையின்போது சுயாதீனக் கண்காணிப்பாளராகச் செயற்படுவதைத் தவிர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

 2. பொது அரங்குகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மேற்கொள்ளப்படும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் பொய்யான தகவல்கள், தரவுகளைப் பரப்புவதற்கும் தண்டனையை வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் வேண்டும். இது பொய்யான தகவல்களை மக்களுக்குப் பரப்பும் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மக்களை தவறான வழியில் திசைதிருப்புவோரிடமிருந்து பாதுகாப்பதற்கு உதவும்.

 3. தேர்தற் பரப்புரைகளில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் நடைமுறைகளில் சிறிய பெரிய கட்சிகள் என்ற பேதமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் சமனான நீதிப் பொறிமுறை பின்பற்றப்பட வேண்டும். முறைப்பாடுகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட அமைத்திலும் இந்த நீதி பின்பற்றப்படுவது அவசியம். 

 4. வினைத்திறனுடைய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு மேலும் இடமளிக்கும் வகையில் அரச, அரச கூட்டுத்தாபனங்களில் பணி புரியும் பதவி நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் சட்டத்திருத்தங்களைச் செய்ய வேண்டும். தற்போது அரசியல் அமைப்பின் 102 ஆம் உறுப்புரை வேட்பாளர் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது. 'வேட்பாளராக நிற்கும் பகிரங்க அலுவலர் அல்லது பகிரங்க கூட்டுத்தானபனமொன்றின் அலுவலர் தேர்தல் காலத்தின் போது பணிபுரிதல் ஆகாது. அதாவது பகிரங்க அலுவலர் ஒருவர் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனமொன்றின் அலுவலர் ஒருவர் ஏதேனும் தேர்தல் வேட்பாளர் ஒருவராக இருப்பின் அவர் எத்திகதியன்று வேட்பாளர் ஒருவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்டாரோ அத்திகதியிலிருந்து தேர்தல் முடியும்வரை விடுமுறையில் இருப்பதாக கருதப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. அரச உத்தியோகத்தர்களில் வெளிக்கடமை புரியும் உத்தியோகத்தர்களாக இருக்கின்ற பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வரை (MN  ; 04) மேற்குறித்த அரசியலமைப்பு சட்டப் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

 இதற்கு மேலதிகமாக வெளிக்கள கடமை புரியும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என்ற பிரிவு (MN  ; 05) ) க்குள் வருகின்ற உத்தியோகத்தர்கள் பதவிநிலை உத்தியோகத்தர்களாக இருப்பினும் அவர்கள் அகில இலங்கை சேவைத்தரத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அகில இலங்கை பதிவிநிலை சேவைத்தரம் (SL) த்திற்கு உட்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏதேனும் தேர்தல்களில் நிற்பின் அவர்கள் தமது பதவியினை நீங்கியே குறிப்பிட்ட தேர்தல்களில் நிற்கலாம் என சட்டம் சொல்கின்றது. இவர்கள் தமது பதவியில் இருந்து நீங்கி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டால் அவர்கள் மீண்டும் பதவியில் இணையமுடியாத நிலை உள்ளது. அவர்களை பதவியில் மீண்டும் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் இருக்கவேண்டும் என்ற சட்ட ஏற்பாடும் உள்ளது. 

 சாதாரண பொருளாதார அபவிருத்தி உத்தியோகத்தர்கள் வரை விடுமுறையில் நின்று தேர்தலில் போட்டியிடலாம் என்ற வரையறையினை இன்னும் ஒருபடி உயர்த்தி அகில இலங்கை சேவைத்தரத்தில் இல்லாத அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்களையும் (MN</p><p>-05) விடுமுறையில் நின்று தேர்தல் கேட்கலாம் என்று திருத்தம் கொண்டு வருமிடத்து களப்பணியில் மக்களின் பிரச்சனைகளை அறிந்த கல்வியறிவுள்ள வினைத்திறனுடையோர் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட ; வழி ஏற்படுத்த முடியும்.

 எல்லை நிர்ணயம் 


 மாகாணசபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் எம்மால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு அமைவாக எல்லை நிர்ணயத்தை தகைசார் நிபுணர்களின் மூலமாக உருவாக்குதல்