டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’!

புதன் நவம்பர் 20, 2019

புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ ‘இந்திரா காந்தி அமைதி விருது’க்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இந்திரா காந்தி பெயரில் அமைதிக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழு அவரது பெயரை தேர்வு செய்தது.

இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “டேவிட் ஆட்டன்பரோ, தம் வாழ்நாளில், இவ்வுலகின் இயற்கை விந்தைகளை அதிக அளவில் வெளிப்படுத்தியவர். ஆகையால்தான் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளர் சுமன் துபே இந்த விருதுபற்றி கூறுகையில், “மக்களிடம் மனிதநேய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அயராமல் உழைத்தவர்; பல்லுயிர்களை பராமரித்து பாதுகாக்க பாடுபட்டவர்; அனைவரும் வாழ்நாள் முழுவதும் நிலையான நல்லிணக்கமான வாழ்க்கை வாழ, தன்னை அர்ப்பணித்து கொண்டவர், டேவிட் ஆட்டன்பரோ” என்று தெரிவித்தார்.