டி.ஆர்.பி மோசடி- அர்னாப் 2-வெளிநாட்டு சுற்றுலா மற்றும் ரூ40லட்சம் கொடுத்தார்! ஒப்புதல் வாக்குமூலம்-

திங்கள் சனவரி 25, 2021

டி.ஆர்.பி மதிப்பீடுகளை சரிசெய்ய ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி, தனக்கு 12ஆயிரம் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும்,ரூ40லட்சம் பணம் கொடுத்ததாக பார்க் முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், தொலைக்காட்சி ஊடகங்களில் டி.ஆர்.பி மோசடி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அர்னாப் கோஷ்வாமி உள்பட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த முறைகேடுக்கு உதவியாக, நிறுவன ஊழியர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்பட 59 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.

ரிபப்ளிக், டைம்ஸ் நவ் மற்றும் ஆஜ்தக் உள்ளிட்ட பல செய்தி தொலைக்காட்சிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாஸ்குப்தா, முன்னாள் பார்க் சி.ஓ.ஓ ரோமில் ராம்கரியா மற்றும் "ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்" தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி உள்பட 12 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக மும்பை காவல்துறை, நீதிமன்றத்தில் 3,600 பக்கங்களைக் கொண்ட 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

அந்த குற்றப்பத்திரிகையில், அர்னாப் கோஸ்வாமிக்கும், முன்னாள் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ்அப் உரையாடலும் இடம் பெற்றுள்ளது.

இந்த உரையாடல் மட்டுமே சுமார் 500 பக்கங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் இந்திய ராணுவ ரகசியங்கள் உள்பட பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் தாஸ்குப்தாவின் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதம மந்திரி அலுவலகம் (பி.எம்.ஓ) உள்ளிட்ட மேல்மட்ட அரசியல் தலைமையுடன் தனக்கு இருந்த நெருக்கத்தையும், அனைத்து அமைச்சர்களும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்ற வாசகத்தையும் அர்னாப் கோஸ்வாமி பயன்படுத்தியதும், செய்தி பிரிவில் இரண்டு ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல்களுக்கான டிஆர்பி புள்ளிகளை அதிகப்படுத்த கோஸ்வாமி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், தாஸ்குப்தாவுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இரண்டாவது குற்றப்பத்திரிகையின்படி, தாஸ்குப்தாவின் அறிக்கை குற்றவியல் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் 2020 டிசம்பர் 27 அன்று மாலை 5.15 மணிக்கு இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

2017ம் ஆண்டு ஜூலை நடைபெற்ற இருவருக்கும் இடையேயான உரையாடலின் போது, ‘தாஸ்குப்தா’ பிரத்தியோக தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி (டிஆர்பி) தரவுகளை கோஸ்வாமிக்கு அனுப்பியதாகவும், தனது ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி புள்ளிகளை அதிகப்படுத்த தாஸ்குப்தாவுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்தாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் உயர்த்த்தி காட்டியதற்கு லஞ்சமாக கடநத 3 ஆண்டுகளில், ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் தலைமை அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து, இரண்டு தனித்தனி விடுமுறை தொகுப்பாக மொத்தம் ரூ 40 லட்சம் வரை தரப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

அதையடுத்து, பார்த்தோ தாஸ்குப்தா, மும்பை காவல்துறைக்கு தனது கைப்பட ஒரு அறிக்கை எழுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில் எனக்கு அர்னாப் கோஸ்வாமியை 2004 முதல் தெரியும். நாங்கள் டைம்ஸ் நவ் பத்திரிகையில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். நான் 2013 இல் பார்க் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தேன். அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக் தொலைக்காட்சி னேலை தொடங்கினார். இந்த தொலைக்காட்சியைத் தொடங்குவதற்கு முன்பே அவர் என்னுடன் பல்வேறு திட்டங்களைப் பற்றி பேசுவார், மேலும் அவரது தொலைக்காட்சிி நிறுவனத்திற்கு நல்ல மதிப்பீடுகளைப் பெற அவருக்கு மறைமுகமாக உதவுவார்.

டி.ஆர்.பி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும் என்று கோஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும். அதனால், எதிர்காலத்தில் எனக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார்.

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு முதன்மை மதிப்பீட்டைப் பெறும் வகையில், டி.ஆர்.பி மதிப்பீடுகளை கையாளுவதை உறுதிசெய்ய, எனது குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். இந்த பணியானது கடந்த 2017 முதல் 2019 வரை தொடரந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி என்னை லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் சொகுசு விடுதியில், என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். அப்போது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கு, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து பயணத்திற்காக 6000 டாலர் பணத்தை கொடுத்தார்.

2019 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி என்னை செயிண்ட் ரெஜிஸில் தனிப்பட்ட முறையில் சந்தித்து எனது ஸ்வீடன் மற்றும் டென்மார்க் குடும்ப பயணத்திற்காக 6000 டாலர்களை கொடுத்தார்.

மேலும் 2017 ஆம் ஆண்டில், கோஸ்வாமி என்னை தனிப்பட்ட முறையில் ஐடிசி பரேல் நட்சத்திர விடுதியில் சந்தித்து ரூ 20 லட்சம் ரொக்கத்தையும் கொடுத்தார். 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், கோஸ்வாமி என்னை ஐடிசி நட்சத்திர விடுதியில் சந்தித்து ஒவ்வொரு முறையும் ரூ 10 லட்சம் கொடுத்தார், என எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இதை தாஸ்குப்தாவின் வழக்கறிஞர் அர்ஜுன் சிங் முற்றிலும் மறுப்பதாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை துணிச்சலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது நீதிமன்றத்தில் எந்தவொரு தெளிவான மதிப்பையும் கொண்டிருக்கவில்லை.

அதுபோல, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோஸ்வாமியின் சட்டக் குழு உறுப்பினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும், கோஸ்வாமி, எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும், அவர் மாநில அரசால் குறிவைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.