டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - வைகோ வாழ்த்து

செவ்வாய் டிசம்பர் 03, 2019

உலகில் 70 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஏழு கோடி பேர் இந்தியாவிலும், 25 இலட்சம் பேர் தமிழ் நாட்டிலும் இருக்கின்றார்கள்.

அவர்கள், தங்கள் வாழ்நாள் நெடுகிலும், வேதனையில் உழல்கின்றார்கள்,  
நாகரிகம் வளர்ந்து விட்ட, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், மாற்றுத்திறனாளிகள் மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வருத்தத்துக்கு உரியது.  
அவர்களுடைய நலன் காப்பதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.  
அவர்களைக் காக்க வேண்டிய அரசுகள், கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.

மாற்றுத் திறனாளிகள் கேட்பது பிச்சை அல்ல, உரிமை.
அரசு. கேளாக் காதினராக இருந்தபோதிலும், மனம் தளராமல் நீதிமன்றங்களின் கதவைத் தட்டி தங்களுக்கு ஆதரவான தீர்ப்பினைப் பெற்றார்கள். ஆனால், அந்தத் தீர்ப்பைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. இனியும் தாமதிக்காமல், அவர்களுடைய குறைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கைககள் மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளியான ஹெலன் கெல்லர் சொன்னார்: “என்னால் எல்லாவற்றையும் செய்யா முடியாவிடினும், என்னாலும் சிலவற்றை செய்ய முடியும்,” என்றார்.

காலத்தால் கைவிடப்பட்டவர்களாக, நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடும் மாற்றுத் திறனாளிகள், சாதிக்கப் பிறந்தவர்கள்.
2020 ஆம் ஆண்டை, நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.

சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ, உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2019) நாளில் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகின்றேன்.