தீவிரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது!

புதன் செப்டம்பர் 11, 2019

எந்தவொரு இடத்திலும், எத்தகைய வழிமுறைகளிலேனும் நடைபெறுகின்ற  தீவிரவாதம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கா, 18 வருடங்களுக்கு முன்னர்  9/11 தாக்குதல்கள் இடம்பெற்ற இன்றைய தினத்தில் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி படுமோசமான தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 18 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இது தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். 

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

எந்தவொரு இடத்திலும், எந்தவொரு வழிமுறைகளிலும் இடம்பெறும் தீவிரவாதம் என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதல்களிலும், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம். 

தீவிரவாதத்தைப் புறக்கணித்து, சமூக ஒற்றுமைக்கு வரவேற்பளித்து அதனை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு இலங்கையுடனும், மாலைதீவுடனும் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.