தீவகம் அனலைதீவு, எழுவைதீவு மக்கள் போக்குவரத்து வசதி இன்றி அவலம்!

சனி ஜூலை 04, 2020

தமிழர் தாயகத்தில், தீவகத்தில் வாழும் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை சிறிலங்கா அரசு உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

யாழ் ஊர்காவற்றை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவை தீவுக்கான சேவையில் ஈடுபட்டு வந்த 'எழுதாரகை' பயணிகள் படகு சேவை நீண்ட காலமாக சேவையில் ஈடுபடுவதில்லை. 

இப்படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் அசமந்த போக்கை கடைப்பிடிக்கின்றனர். 

எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றுக்கான போக்குவரத்துக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை பாரிய ஆபத்தானதாகவே காணப்படுகின்றன. 

analaitivu

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள அனலைதீவின் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும், எழுவைதீவில் உள்ள ஒரு கிராம அலுவலர் பிரிவிலும் வாழும் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நன்மை கருதி 'எழுதாரகை' என்ற பயணிகள் போக்குவரத்து படகு கடந்த 2017ம் ஆண்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

அந்தச் சேவை இப்போது மாதக்கணக்கில் கைவிடப்பட்ட நிலையில் மேற்படி தீவுகளில் உள்ள மக்கள் தனியார் படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் நிலைமையில் உள்ளனர்.

அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய இரு தீவுகளையும் யாழ் நகரையும் இணைக்கும் வகையிலும் தீவக மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுவாக்கும் வகையிலும் மீள்குடியேற்ற அமைச்சின் சுமார் 137 மில்லியன் ரூபா செலவில் 40 பயணிகள் அமர்ந்து செல்லக் கூடிய இருக்கைகளை கொண்டதும், மொத்தமாக 100 வரையான பயணிகள் பயணிக்கக் கூடியதுமான படகு சேவையில் விடப்பட்டது.

பயணிகளுடன் மூன்று தொன் பொருட்களையும் ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லக் கூடிய இப்படகுச் சேவையானது 2017ம் ஆண்டு டிசம்பர் 27ம் திகதி முதல் ஊர்காவற்றை கண்ணகைஅம்மன் இறங்கு துறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 19ம்திகதி முதல் எந்தவித போக்குவரத்துச் சேவைகளிலும் ஈடுபடுத்தபபடாமல் இப்படகு விடப்பட்டுள்ளமையால் இந்தத் தீவுகளில் உள்ள மக்கள் நீண்ட கடல் பயணங்களை பாதுகாப்பற்ற சிறிய படகுகளிலும் தனியார் படகுகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில்,

மேற்படி படகுசேவையை ஆரம்பிப்பதில் பாரிய சாவல் காணப்படுகின்றது. அதாவது இதற்கான எரிபொருள் செலவுகள், இதர செலவுகள் அதிகளவிலே காணப்படுகின்றமையே இதற்குக் காரணமாகும். நாள் ஒன்றுக்கு எரிபொருள் செலவிற்கு முப்பதாயிரம் ரூபாவும் சேவைக்காக அமர்த்தப்பட்ட ஐந்து பணியாளர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வந்தது.
 
மேற்படி படகுச் சேவை மூலம் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபா வரையிலேயே வருமானமாகக் கிடைத்ததாகவும், இதனால் இச்சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களை வேற்று நாட்டு மக்கள் போலவே சிறிலங்கா அரசு கருதுகின்றது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.