தினந்தினம் உயிருக்குப் போராடும் பாகிஸ்தானிய சிறுவன்!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

Chondrodysplasia என்ற அரியவகை மரபணு குறைப்பாட்டுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தானிய தம்பதியருக்கு பிறந்தவர் ஷபின் முகமது. கழுத்திற்கு கீழே செயல்படாத நிலையில், தினந்தினம் உயிருக்காகப் போராடிவரும் அச்சிறுவனுக்கான மருத்துவச்செலவு மிகமிக அதிகமாக இருப்பதால் நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளாக இருந்த அத்தம்பதியரின் நிரந்தர விசாவுக்கான விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ வசதியைப் போன்று பாகிஸ்தானில இல்லை எனக்கூறியுள்ள சிறுவனின் தந்தை குவாசிம் பட், அங்கு சென்றால் தனது மகனின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்கிறார். 

குழாய் மூலமே உணவையும் சுவாசத்தையும் பெறும் நிலையில் உள்ள இச்சிறுவனை விமானத்தில் ஏற்றுவது உயிருக்கு அச்சுறுத்தலானது என்கின்றனர் மருத்துவர்கள். 

கருணை அடிப்படையில் இவ்விவாகரத்தில் ஆஸ். உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தலையிடக்கோரி உருவாகப்பட்டுள்ள இணைய மனுவில் 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 

இதனையடுத்து, குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் இந்த விவகாரம் குறித்து ஆராய்வார் என ஆஸ். உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

“இதுவே எங்களுக்கான கடைசி வாய்ப்பு மற்றும் எங்களது மகனுக்கான கடைசி நம்பிக்கையும் கூட,” என ஆஸ்திரேலிய ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார் சிறுவனின் தந்தை.