தின்ற இலையை எறிஞ்சு போட்டு திருவாரூர் கல்லைப் புரட்டுங்கோ!

வியாழன் பெப்ரவரி 07, 2019

வணக்கம் பிள்ளையள், இந்தக் குளிருக்குள் பிலாவடி மூலைப் பக்கம் போக முடியாமல் நான் படுகிறபாடு சொல்லி மாளாது.

கனடாவில் போகிற வழியயல்லாம் ஒரே பனிப்படலம். பேசாமல் இலண்டன், பாரிஸ் பக்கம் போய் ஒதுங்குவம் என்று பார்த்தால் அங்கேயும் கடும் பனி கொட்டுதாம்.

மாசிப் பனி மூசிப் பெய்யும் என்று அந்த நாட்களில் எங்கடை அப்பு சொல்கிறவர்.

அப்பேக்குள்ளை நான் நினைக் கிறனான் கிழவனுக்கு பனி பிடிச்சுப் போட்டுது என்று. ஆனால் இஞ்சை புலம்பெயர் தேசங்களில் மாசிப் பனி மூசி மூசிப் பெய்கிறதைப் பார்க்கேக்குள்ளை, ஒரு வேளை அப்பு கனடா பக்கம் வந்து போனவரோ என்று இப்ப நான் யோசிக் கிறேன்.

உதுக்குள்ளை அண்டைக்கு என்ரை மருமகன் ரெலிபோன் அடிச்சு வில்லங்கத்துக்குக் கேட்டவன், "அம்மான், கெதியில் கனடாவில் தேர்தல் நடக்கப் போகுதாம். நீங்களும் தேர்தலில் நிண்டு மந்திரி ஆகலாமே?'

இப்படி அவன் என்னை கேட்டதும் எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.

கனடாவில் மந்திரி ஆகி றது என்றால் என்ன சும்மா லேசுப்பட்ட காரியமே? ஏதோ ராதிகா சிற்சபையீசனும், கரி ஆனந்தசங்கரியும் பாராளுமன் றத் தேர்தலில் வென்று எம்.பி ஆகின மாதிரி இந்தக் கிழட்டு வயசில் நானும் எம்.பி ஆகிறது என்றால் சும்மாவே?

எனக்கு அந்த நாட்களில் இருந்து மந்திரி ஆகிறதுக்கு ஆசைதான். ஆனாலும் ஆசையை அடக்கிக் கொண்டு சொன்னேன்: "எடேய் தம்பி, உனக்குக் கொம்மானோடை ஒரே குசும்புதான். தின்ற இலை தூக்கி எறிய மாட்டாராம், திருவாரூர் கல்லைப் புரட்டப் போய்ட்டாராம் என்று ஆச்சி என்னை முந்தித் திட்டுகிறது உனக்கு ஞாபகம் இல்லை யோடா?

நான் ஒரு எம்.பி ஆகிறதே நடக்கிற காரியம் இல்லை. அதுக்குள்ளை எப்படியடா மந்திரி ஆகிறது?' இப்படி நானும் அவனை ஒரு வாங்கு வாங்கினேன்.

அதுக்கு மருமகன் சொன்னான்: "இல்லை அம்மான், இஞ்சை கன பேர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் தாங்கள் எம்.பியாக இருக்கிறம், மந்திரி ஆக இருக்கிறம் என்று சொல்லிக் கொண்டு திரியீனம். அதுதான் உங்களுக்கும் மந்திரி ஆகிற ஆசை இருந்தால் நீங்களும் நாடுகடந்த அரசாங்கத்தில் ஒரு மந்திரி பதவியை வாங்கிக் கொள்கிறது தானே?'

எனக்கு வந்த கோபத்துக்கு, பக்கத்திலை மருமகன் நின்றிருந்தால் நாலு சாத்து சாத்தியிருப்பன். இந்த வயதில் எனக்கு மண்டை கழன்று போய் விட்டது என்று நினைச்சு ரெலி போன் எடுத்து என்னோடு கத்துகிறான்.

இப்படித் தான் பாருங்கோ இலண்டனில் இருக்கிற என்ரை நண்பரின் மகன் கிட்டடியில் கதைக்கேக்குள்ளை சொன்னவன், "அங்கிள், இஞ்சை இலண்டனில் கொஞ்சப் பேர் தங்களைத் தாங்களே எம்.பி என்று சொல்லிக் கொண்டு திரியீனம். எம்.பி என்றால் மண்டைப் பிழை (எம் என்றால் மண்டை: பி என்றால் பிழை) என்று தானே அர்த்தம்?' என்று கேட்டவன்.

ஆனாலும் பாருங்கோ இஞ்சை புலம்பெயர் தேசங்களில் கொஞ்சப் பேருக்கு மண்டை கழன்று போய் விட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரியுது.

இப்பிடித் தானாம் இலண்டனில் ஒரு பொம்பிளை 2010ஆம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில் போட்டி போட்டவாவாம். அதுவும் சும்மா இல்லை. ஆயிரம் பவுண்ஸ் கட்டுப்பணமாக செலுத்திப் போட்டி போட்டவாவாம்.

ஆனால் இதிலை என்ன பகிடி என்றால், தேர்தல் கட்டுப்பணத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆட்கள் தான் அவாவுக்கு கொடுத்தவையளாம். ஆனால் மனுசி தேர்தலில் வென்றதும் செய்த முதல் வேலை மனுசனோடை அமெரிக்காவுக்கு ஓடிப் போய் உருத்திரகுமாரனிடம் தனக்கு மந்திரிப் பதவியும், புருசனுக்கு செயலாளர் பதவியும் கேட்டவாவாம்.

 

tgte

 

அவரும் அதுக்கென்ன, உங்களுக்குப் பிடிச்ச அமைச்சுப் பதவியை உங்களுக்கும், செயலாளர் பதவியை உங்கடை புருசனுக்கும் தாறன் என்று இரண்டு பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைச்சவராம்.

பிறகென்ன? இரண்டு பேரும் இலண்டன் போனதும் தான் தாமதம், அந்த அம்மணியின் ரெலிபோனுக்கு ஆராவது அழைப்பு எடுத்தால் உடனே அவாவின்ரை புருசன் தான் விழுந்தடிச்சுக் கொண்டு எடுப்பாராம். எடுத்து சும்மா "ஹலோ' என்று சொன்னால் பரவாயில்லை. மனுசன் விழுந் தடிச்சுக் கொண்டு ரெலிபோனை எடுத்த கையோடை சொல்லுமாம்: "ஹலோ, இது அமைச்சரின்ரை தொலைபேசி. நான் அவாவின்ரை செக்றெட்டரி (செயலாளர்) கதைக்கிறன். நீங்கள் ஆர் அங்காலை கதைக்கிறியள்'

உது போதாதென்று, அவரின்ரை வேலையிடத்தில் மேலதிக நேரத்திற்கு வேலை செய்யச் சொல்லி அவரின்ரை மேலதிகாரி கேட்டால் உடனே அவர் கூறுவாராம்: "நான் அமைச்சருக்கும் வேலை செய்கிறனான். இந்த வேலை முடிச்சதும் அமைச்சர் எனக்காக பார்த்துக் கொண்டிருப்பார். என்னாலை இஞ்சை நின்று கிளீனிங் (சுத்தப்படுத்தல்) வேலை எல்லாம் செய்ய ஏலாது. நீங்கள் வேறை ஆரையும் ஓவர் ரைமுக்கு எடுங்கோ.'

பிறகு ஒரு நாள் பார்த்தால் மனுசன் வீதியால் நடந்து போகேக்குள்ளை தனக்குத் தானே, "நான் மினிஸ்டரின் செக்றெட்டரி, நான் மினிஸ்டரின் செக்றெட்டரி' என்று புசத்திக் கொண்டு திரியிறதை ஆட்கள் கண்டு போட்டு, அவரை எம்.பி (மண்டைப் பிழை) என்று கூப்பிடத் தொடங்கி விட் டீனம். ஆனால் மொக்கு மனுசன் விசயம் தெரியாமல், காண்கின்ற ஆட்கள் எல்லோரிடமும் சொல்லுவாராம். "தம்பி என்ரை மனுசி ஆர் தெரியுமே? அவா ஒரு மினிஸ்டர். இலண் டனுக்கு மட்டுமில்லை பாருங்கோ. ஒஸ்ரேலியாவுக்கும் அவாதான் மினிஸ்டர். கனடாவுக்கும் அவா தான் மினிஸ்டர். முழு உலகத்துத் தமிழருக்கும் அவா தான் மினிஸ்டர்'.

 

tgte

 

இப்ப நீங்கள் சொல்லுங்கோ, இப்பிடியான ஒரு எம்.பி பதவி, மந்திரி பதவி எல்லாம் எனக்குத் தேவையோ? இல்லாட்டி உங்களுக்குத் தேவையோ?

உதுக்குள்ளை இன்னொரு பகிடியும் இருக்குப் பாருங்கோ.

அன்றைக்கு என்ரை பேத்தி வந்து மகனிட்டை கேட்டாள்: "அப்பா, எங்கடை பள்ளிக்கூடத்தில் எங்கடை சமூகத் தின்ரை சாதனைகளைப் பற்றிக் கதைக்கச் சொல்லியிருக்கீனம். என்ரை ஜப்பான்கார நண்பி தங்கடை நாட்டில் கை இல்லாத ஒருவருக்கு செயற்கைக் கை பொருத்தி அவரைத் தாங்கள் பெரிய நீச்சல் வீரராக்கியிருக்கிறதைப் பற்றிக் கதைக்கப் போகிறேன் என்றவள். அதே மாதிரி என்ரை யேர்மன்கார நண்பி தாங்கள், தங்கடை நாட்டில் காலில்லாத ஒருத்தருக்கு செயற்கைக் கால் பொருத்தி அவரை சிறந்த ஓட்ட வீரராக்கியிருக்கிறம் என்று சொன்னவள். நான் எங்கடை சமூகத்தின்ரை எந்தச் சாதனையைக் கதைக்கலாம்?

அதுக்கு மகன் சொன்னான்: "நாங்கள் நாடே இல்லாமல் உலகம் முழுக்கலும் உள்ள தமிழரை ஆள்வதற்குக் கற்பனை அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, அதற்கு எம்.பிமாராகவும், மந்திரிமாராகவும் மண்டைப் பிழையுள்ள கொஞ்சப் பேரை நியமிச்சிருக்கிறம். அதுவே பெரிய சாதனை தான். ஆனால் அதை விடப் பெரிய சாதனை அந்த மண்டைப் பிழையுள்ள ஆட்களுக்கு பிரதம மந்திரியாக இருக்கிறதுக்கு மண்டைக்குள் எதுவுமே இல்லாத ஒருத்தரை நியமித்திருக்கிறம் என்று பெருமையாகச் சொல்லு.'

வேறு என்ன பிள்ளையள்? நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு விளங்குது தானே? ஏதோ பார்த்து நடந்து கொள்ளுங்கோ.

வரட்டே?

- பிலாவடி மூலைப் பெருமான்-
 

நன்றி: ஈழமுரசு