திருகோணமலையில் தடியினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

சனி பெப்ரவரி 22, 2020

திருகோணமலை, தம்பலகாமம் காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட பத்தினிபுரம் பிரதேசத்தில் தடியினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  இந்த சம்பவம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளதாகவும் காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 35 வயதுடைய கியாஸ் எனவும், அவர் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரின் மனைவி, வெளிநாடு சென்ற நிலையில் மாடு மேய்க்கும் தொழில் மேற்கொள்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் காவலுக்கு சென்ற சந்தேகநபரும், மாடுகளைப் பார்வையிடச் சென்ற கொலை செய்யப்பட்ட நபரும் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கை கலப்பாக மாறிய நிலையிலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பலகாமம் காவல் துறையினர் , சந்தேகநபரை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.