திடீரென தோன்றிய ஆயுத தாரிகள்!

வெள்ளி ஜூலை 19, 2019

 அம்பாறை – சம்மாந்துறை காவல் துறை  பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் ஏந்திய இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த காணியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை காணி உரிமையாளர் உலாவிக்கொண்டிருந்த நிலையில், இருவர் கையில் துப்பாக்கியுடன் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கிச் சென்றுள்ளார். இதன்போது துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயற்சித்ததுடன், அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் குறித்த ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அதனைத் தொடர்ந்து பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் குறித்த பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர்களெவரும் கைது செய்யப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.