திட்டமிட்ட படி நீட் நுழைவு தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு-

செவ்வாய் ஜூன் 28, 2022

புதுடெல்லி- திட்டமிட்டபடி நீட் நுழைவுத்தேர்வு 17-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை ( UG ) மருத்துவப் படிப்புகளில் சேர NEET – UG தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான NEET – UG தேர்வு வரும் ஜூலை 17-ல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

அதேவேளையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்படும் CUET – UG தேர்வும் ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 10 வரை நடைபெறும் என்றும், IIT, IIM உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் Engineering, Technology படிப்புகளில் சேர நடத்தப்படும் JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

12-ம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் NEET, CUET, JEE Main ஆகிய தேர்வுகள் அடுத்தடுத்து வருவதன் காரணமாக தங்களால் தேர்வுகளுக்கு தயாராவது கடினம் என்றும், ஒரே திகதியில் இருவேறு தேர்வுகள் அட்டவணையிடப்பட்டுள்ளதால்,

ஏதேனும் ஒரு தேர்வில் பங்கேற்க இயலாமல் போய்விடும் என்றும் தெரிவித்து, NEET, CUET, JEE Main தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும், ஒரே தேதியில் வெவ்வேறு தேர்வுகளை நடத்தக்கூடாது என்றும், தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் வேண்டும் என்றும் வலியுறுத்தி தேசிய தேர்வு முகமை, ஒன்றிய கல்வி அமைச்சகம், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு ட்விட்டர் வாயிலாகவும், கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள தேசிய தேர்வு முகமை ( NTA ), கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் இருந்து கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்தும் தெளிவாக திட்டமிடப்பட்டிருப்பதாகவும், உயர்கல்வி நுழைவுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், மாணவர்கள் அவரவர் எழுதும் தேர்வுகளுக்கு ஏற்கனவே உரிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாகவும்,

எனவே எந்தக்காரணத்தைக் கொண்டும் தேர்வுகள் தள்ளிவைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 17-ல் NEET – UG தேர்வு, ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 10 வரை CUET – UG தேர்வு, ஜூலை 21 முதல் 30 வரை JEE Main தேர்வு ஆகியவை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவித்துள்ளது.