தக்காளி ரசமும்,கவனரிசி அல்வாவும்!

வியாழன் அக்டோபர் 17, 2019

எல்லோரும் தக்காளி ரசமும், கவனரிசி அல்வாவும் சாப்பிட்டு ஜிவ் ஜிவ் என்று தேக ஆராக்கியத்தோடு இருக்கிறதாலை நான் உங்களிட்டை சுகம் விசாரிக்க வேண்டியதில்லை.

பின்னை என்ன பிள்ளையள், போன கிழமை எங்கடை சீன அதிபர் சீ ஜிங்க்பிங்க் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தவராம். மனுசனை வரவேற்கிறதுக்கு என்று குஜராத்தில் இருந்து வேட்டி சட்டையோடு கிளம்பிப் போய், வாங்கோ மிஸ்டர் சீ, தமிழ்நாட்டில் தக்காளி ரசமும் கவனரிசி அல்வாவும் சாப்பிட்டுப் பாருங்கோ என்று அவருக்கு நரேந்திர மோடி மாத்தையா விருந்து வைச்சவர் என்றால் பாருங்கோவன்.

உதுக்குள்ளை செட்டிநாட்டு உணவு வகைகளை மனுசன் ருசிச்சுச் சாப்பிடேக்குள்ளை மோடியிட்டை கேட்டவராம், ‘நீங்கள் எங்கடை சீன நாட்டு சிச்சுவான் மாட்டிறைச்சிப் பிரட்டல் சாப்பிட்டிருக்கிறியளோ?’ என்று.உதைக் கேட்டதும் மிஸ்டர் மோடி வெலவெலத்துப் போய்ச் சொன்னவராம், ‘நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறது இல்லை. அது பாவம் மிஸ்டர் சீ. ஆனாலும் வெளிநாடுகளுக்கு எல்லாம் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறதில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறம்’ என்று.அவ்வளவு தான்.

மோடியாரை ஒரு மாதிரிப் பார்த்துப் போட்டு, தன்ரை கரண்டியை ஜிங்க் பிங்க் என்று தட்டில் ஒரு தட்டுத் தட்டி சாம்பாரையும், அப்பளத்தையும் சீ ஜிங்க்பிங்க் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட்டவராம். ஆனால் எங்கடை தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை எல்லாம் கவனிக்காமல், சீ ஜிங்க்பிங்க் தக்காளி ரசம் சாப்பிட்டவர், கவனரிசி அல்வாவை மெய்மறந்து உண்டவர், இட்லியைக் கண்டதும் அதைக் கொஞ்ச நேரம் கண்ணை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவர் என்று எல்லே கதையளந்தவையள்.

111

உதுக்குள்ளை பூகோள அரசியல் கதைக்கிற எங்கடை ஆட்கள் எல்லோரும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் சண்டை வருமா? இல்லையா? என்று வாக்குவாதப்படுவதை விட்டுப் போட்டு, தக்காளி ரசத்தையா? அல்லது சாம்பார் குருமாவையா சீ ஜிங்க்பிங்க் விரும்பிச் சாப்பிட்டவர் என்று தங்களுக்குள்ளை விவாதிச்சவையளாம்.

கடைசியிலை பூகோள அரசியல் சாம்பாருக்குள்ளும், தக்காளி ரசத்துக்குள்ளும் முடங்கிப் போய்ச்சு என்றால் பாருங்கோவன் உலக அரசியல் எங்கே நிற்குதென்று.

சரி, உலக அரசியலை விட்டுப் போட்டு எங்கடை ஈழத்தீவிலை நடக்கிற அரசியலைப் பார்ப்பம் என்று திரும்பினால் தமிழ்நாட்டு சாம்பார், தக்காளி ரசச் செய்திகள் பரவாயில்லை போலத் தான் எனக்கு இருக்குது.

ஒரு பக்கத்திலை சிங்கள நாட்டு அரசுத் தலைவருக்கான தேர்தலை எப்படி எதிர்கொள்கிறது என்று தெரியாமல் எங்கடை ஆட்கள் ஆளுக்கொரு திசையிலை நர்த்தனம் ஆடிக் கொண்டு இருக்கீனம். இன்னொரு பக்கத்திலை மைத்திரி மாத்தையாவுக்குப் பிறகு ஆரை அதிபர் சிம்மாசனத்தில் இருத்திறது என்ற குழப்பத்தில் சிங்களச் சனம் நிற்குது.

ஐந்து வருசத்துக்கு முதல் தன்ரை செல்லப்பிள்ளையாக இருந்த மைத்திரிபால சிறீசேனாவை தூக்கிப் பிடிச்சு மகிந்த மாத்தையாவுக்கு ஆப்பு வைச்ச சந்திரிகா அம்மையார், ‘ஐயோ திறமை இல்லாத ஒருத்தனிட்டைக் கட்சியையும், ஆட்சியையும் கொடுத்து எல்லாத்தையும் சீரழிய விட்டுப் போட்டேனே!’ என்று கதறி அழுகிறாவாம்.

தமிழரின்ரை சாபம் ஒரு நாளும் சும்மா விடாது பிள்ளையள்.

இதைத் தான் ஊழ் வினை என்கிறது பிள்ளையள்.

இதிலை பகிடி என்னவென்றால் இந்த முறை நடக்கிற தேர்தலை முப்பத்தைந்து, முப்பத்தாறு பேர் போட்டி போடுகீனமாம். இராணுவத் தளபதியாக இருந்த மகேஸ் சேனநாயக்காவும் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.கிழக்கிலை ஜிகாத் குழுவை உருவாக்கித் தமிழ் மக்களைக் கொன்று குவிச்ச ஹிஸ்புல்லாவும் தேர்தலில் குதிச்சிருக்கிறார்.

உதுக்குள்ளை ஹிஸ்புல்லா தான் அடுத்த ஜனாதிபதி என்ற தோரணையில் வீதியில் நின்று அவரின்ரை ஆதரவாளர் ஒருத்தர் போட்ட கூச்சல் இருக்கெல்லோ... அதைப் பார்த்தவுடன் எனக்கு வடிவேலுவின்ரை நகைச்சுவையள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

பின்னை என்ன?

யார் போட்டி போட்டாலும், போடா விட்டாலும் கடைசியில் சிங்கள நாட்டு அதிபர் தேர்தலில் சிங்களவன் ஒருத்தன் தான் வெற்றி பெறப் போகிறான்.  

இந்தத் தேர்தலில் யார், யாருக்கு வாக்களிச்சாலும், கடைசியில் முன்னணியில் நிற்கிற இரண்டு பேரில் ஒரு ஆள் முதலாம், இரண்டாம் விருப்பு வாக்குகளைக் கூட்டி வருகிற தொகையின் அடிப்படையில் வெற்றிபெறுகிறது தான் நடக்கப் போகுது. அது சஜித்தாக இருந்தாலும் சரி, கோத்தபாயவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி வெல்லப் போகிறது ஒரு சிங்கள வேட்பாளர் தான். உது தான் வருகிற தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிறதுக்கு எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே பின்னடிச்சதுக்குக் காரணம்.

உதை விளங்காமல் எங்கடை தங்கச்சி அனந்தியும், சிவாஜிலிங்கமும் அடிக்கிற கூத்தை நினைச்சால் எனக்கு ஒரே சிரிப்புத் தான் வருகின்றது. இதைத் தான் அந்தக் காலத்தில் எங்கடை அப்பு, ஆச்சிமார் ‘சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று சொல்கிறவையள்.

தமிழ்நாட்டுக்கு ஒரு சுப்பிரமணிய சுவாமி மாதிரி எங்கடை தமிழீழத்திற்கு ஒரு சிவாஜிலிங்கம் அரசியல் கோமாளியாகப் பிறந்திருக்கிறார்.

111

சுப்பிரமணிய சுவாமி மாதிரி எங்கடை சிவாஜிலிங்கத்தாருக்கு செத்த வீட்டில் பிணமாகவும், கலியாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் இருக்கிறதில் அலாதிப் பிரியம். அதுக்காக எங்கேயும் மனுசன் தலைகீழாக நிற்கும்.
உந்தச் சகதிக்குள்ளை எங்கடை தங்கச்சி அனந்தி சசிதரன் விழுந்திருக்கிறது அவாவின்ரை அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமில்லாமல், எழிலனின்ரை நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போகுது.

சரி, சொன்னால் எங்கே விளங்கப் போகுது?

இது இப்படியிருக்க போன கிழமை அரசல் புரசலாக இன்னொரு கதையும் வந்திருக்குது. அதிபர் தேர்தலில் தன்னைப் பொது வேட்பாளராகத் தமிழர்கள் நிறுத்தியிருந்தால் தமிழரின்ரை வாழ்கையில் விடிவு கிட்டியிருக்கும் என்று எங்கடை தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தலைவர் ஆனந்தசங்கரியார் முழங்கித் தள்ளினவராம். மனுசனுக்கு உடும்பு இறைச்சி தின்கிற ஆசை இன்னும் அடங்கவில்லை போல் இருக்குது.

எல்லாம் தமிழரின்ரை தலைவிதி.

சீன அதிபர் சீ ஜிங்க்பிங்கே தக்காளி ரசத்தையும், சாம்பாரையும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடேக்குள்ளை இவருக்கு இப்ப உடும்புக் கறி தான் தேவை.

வேறை என்ன?
அடுத்த முறை சந்திப்பம், பிள்ளையள்.

நன்றி: ஈழமுரசு