தழும்பு!

சனி நவம்பர் 23, 2019

ஞாபகங்களில் தீப்பற்றச் செய்கிறது
அந்தப் பாடல்.

அறுவடைக்கு வராதழிந்த
எல்லாத் தியாகங்களின் சுவடுகளிலிருந்தும்
கசிகிறது நெடுங்குருதி.

இழப்புக்களைச் சுமந்த குடும்பங்களின் வீடுகளில்
விளக்கெரிக்கிறது கண்ணீர்.

இரத்த நிலத்தில் புதைந்து போன
விதை முகங்களிலிருந்து எழுகிறது
தீராப் பெருமூச்சு.

இன்னமும்
இறக்கப்படாதிருக்கும் சிலுவைகள் மீது
இப்போதும் பாரமேற்றப்படுகிறது.

ஆணியடிக்கப்பட்டு விட்ட கனவுகளை
பிடுங்கிச் செல்ல முடியாதபடி
நாங்கள் மெலிந்து போயிருக்கிறோம்.

இப்போதும் விடியாமலே இருக்கும்
எங்கள் கிழக்கு வாசல்களில்
அவர்கள் மீளவும் வந்து நின்று கொண்டு
நக்கல் புன்னகையை விரிக்கிறார்கள்.

ஒரு முற்றுப் பெறாத பயணத்திலிருந்து
திரும்பியிருக்கும் பாதங்களெங்கும்
படர்கிறது பெருவலி.

நாங்கள்
சூரியனுக்காக காத்திருக்கிறோம்.

---xxx---
தீபிகா