தமிழ் அரசியல் கட்சிகள் தமது தாயகக் கோட்பாடுகளை இழந்துவிட்டதா?

ஞாயிறு ஜூன் 23, 2019

தமிழ்த்தேசியம் பேசிய தமிழ் அரசியல் கட்சிகள், கல்முனையில் சிங்கள பௌத்த பேரினவாத துறவிகளினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதும், தமிழ் கட்சிகள் தமது தாயகக் கோட்பாடுகளை இழந்துவிட்டதா என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழத்தொடங்கியுள்ளது. 

சிறீலங்காவில் கடந்த ஏப்ரல் 21இல் ஏற்பட்ட இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் நிலைமைகள் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளதை அவதானிக்கும் போது, போர்க்குற்றங்களை புரிந்;த சிங்களப் படைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சமூகம் சார்ந்த மக்கள் இன்னல்படுவதை தவிர்த்துக் கொள்வதற்காக சகோதர இனத்தைச் சார்ந்த அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்றி தமது பதவிகளை தூக்கியெறிந்துள்ளமை அவர்களின் ஒற்றுமையைக் வெளிக்காட்டியுள்ளது.

ஆனால், தமிழ் அரசியல் வாதிகள் யுத்தம் நடைபெற்ற போதும்தான், தற்போதைய சூழ்நிலையிலும் தங்களை பதவி நாற்காலியில் அமரவைத்த தமிழ் மக்களுக்கு பல்வேறு துன்பங்கள் நேர்ந்த போது எவரும் தமது பதவிகளை திறக்கவுமில்லை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுமில்லை. தமிழ் மக்கள் கொத்துத் கொத்தாக சிங்களப் படைகளினால் கொன்றொழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தவர்களாகத்தான் தமிழ் அரசியல் தலைமைகள் இருந்தனர்.

எனினும், 2006ஆம் ஆண்டு யுத்தம் மூண்டபோது, சிறீலங்காவின் படைகளைச் சேர்ந்தவர்கள் ஆழ ஊடுருவும் எனும் பெயரில் விடுதலைப் புலி உறுப்பினர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் என அனைவரையும் குறிவைத்து தாக்குதல் நடாத்தினாhர்கள். அப்போதைய நிலையில் குறிப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் பதவிகளிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கோரிக்கை கூட விடுக்கப்பட்டது. ஆனால், இன்று மற்றவர்களை குறைகூறிக் கொண்டு அரசியல் செய்பவர்களும் தமது பதவிகளை திறக்கவில்லை. இது தமிழர்களின் ஒற்றுமையின் பரப்பபைக் காட்டுகிறது.

முப்பது வருட அகிம்சைப் போராட்டம், முப்பது வருட ஆயுதப் போராட்டம் எனக் போராடிய தமிழ் இனத்திற்கு இன்று பெரும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாதம் தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துகின்றது. பேரினவாத சக்திகளின் சதித்திட்டத்திற்கு இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் வீழ்ந்துள்ளமை தமிழ் மக்கள் அனைவரினதும் மட்டத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

உண்மையில், கல்முனைப் பிரச்சினையைப் பொருத்தவரையில் சர்வமதத் தலைவர்களைக் கொண்டு போராட்டம் நடாத்தி தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. காரணம் தமிழ் முஸ்ஸிம் உறவைப் பலப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் இரு சமூக அரசியல் தலைமைகளும் இவற்றை மிகவும் புத்திசாதுரியமான முறையில் கையாண்டிருக்க வேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போது, பேரினவாத சக்திகளுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய் போன்று கல்முனை பிரச்சினையாகிவிட்டது.

தமிழர்களின் போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என சர்வதேசத்தை கோரிவரும் நிலையில். சிங்கள பேரினவாத சக்திகளுடன் தமிழ் தலைமைகள் சேர்ந்து இயங்குவதென்பது தமிழர்களின் கோரிக்கையை எங்கு கொண்டுவிடும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்களின் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறுவகையில் உதவிகளை மேற்கொண்ட நாடுகள் சதிகளை மேற்கொண்டுவரும் நிலையில், தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் அதற்கு உரமுண்டுவதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமல்ல, சிறீலங்காவில் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் பௌத்த துறவிகளின் கையில்தான் உள்ளது என்பதை உணர்த்தும் செயற்பாடுக்ள சிறீலங்காவில் இடம்பெற்றுள்ளதை அனைவரும் அறிவர். எனவே, சிறீலங்காவில் ஆட்சி மதம் சார்ந்நது என்பதற்கு வேறுஎன்ன ஆதாரம் வேண்டும். இதற்கு முஸ்ஸிம் அரசியல் தலைமைகளும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிறுபிக்க அண்மையில் சிறீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தலைமையில் சென்ற குழுவொன்று அஸ்கிரிய பீட பௌத்த துறவிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். 

எனவே, இன்றைய சூழ்நிலையில், தேசியம் பேசிக் கொண்டு அரசியல் செய்யும் எந்த தமிழ் அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழர்கள் மத்தியில் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்துவர்கள்? தங்களின் வாங்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதைவேண்டுமென்றாலும் இவர்கள் செய்வார்கள் என்பதை எவ்வித ஐயமும் இல்லை. ஒருத்தரை ஒருவர் குற்றம் கூறிக் கொண்டு அரசியல் நடாத்தும் தலைமைகளும் தமிழ் மக்களின் கேள்விக்கு என்னபதில் வைத்துள்ளார்கள்.

தமிழ் அரசியல் தலைமைகள் விட்டபிழைதான் பௌத்த மேலாதிக்கம் மேலோங்குவதற்கு காரணமாக அமைந்தது. இவ்வாறுதான் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறாவோடை பகுதியில் மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் பங்குபற்றி அப்பகுதியில் வசிக்கும் தமிழ் முஸ்ஸிம் உறவுகளை பாதிப்படையச் செய்யும் வகையில் செயற்பட்டார். தமிழ் மக்கள் மத்தியில் எழும் இவ்வாறான சின்னச் சின்ன பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்;த்திருந்தால் நிலைமை இவ்வாறு பெரிதாக வெடித்திருக்க வாய்ப்பில்லை. என்பதே உண்மை.