தமிழ் சமூகம் மீதான நிலக்சனின் கனவுகளை நிலா நிதியும் நனவாக்கும்!

வெள்ளி சனவரி 03, 2020

"அவனது வசீகரப்பேச்சுக்கள் அன்றைய பொழுதுகளில் பலரையும் கவர்ந்திருந்தது. அன்றைய சூழல் சமாதான காலம் என்ற முகமூடியை அணிந்திருந்தபோதும் தமிழ் மாணவருக்கு எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் அதிகமாகவே காணப்பட்டிருந்தது. 

நிலா அப்போதெல்லாம் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் என மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தான். யாழ்ப்பணம் இந்துக் கல்லூரியில் கற்ற அவன் உயர்தரப்ப படிப்பு முடிந்துபோக நிலா தன்னை ஊடகத்துறையின்பால் இணைத்துக்கொண்டான். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சாளரம் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த நிலா யாழ் மாவட்ட மாணவர் அமைப்புடனும் தொடர்புடையவராக இருந்தான். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வழங்கள் பயிற்சி மையத்தில் தன்னை ஊடக மாணவனாக இணைத்துக்கொண்ட நிலக்ஸன் ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவுகளைப்பேணிவந்தான்.  தமிழ் மாணவர்களது உரிமைகளில் நிலாவின் குரலின் பங்களிப்பு முக்கியமானது. 

அவனது எழுத்துக்களின் தாக்ககத்தை சாளரம் சஞ்சிகை வாங்க அன்றைய நாட்களில் மாணவர்கள் வாங்க காட்டிய முனைப்புக்களில் அறிந்திருக்க முடியும். பாடசாலை மாணவர் அமைப்பாக ஆரம்பித்த அவனது பயணம் தமிழ் மாணவர் அமைப்புவரை விரிவுபட்டிருந்தது.

அன்றைய சூழல் மிகவும் பயங்கரமானதாகவே இருந்தது. யுத்த அரக்கன் தனது சமாதானம் என்ற முகமூடியை கிழித்து எறிந்திருந்த காலம் அது. மாலை ஆறு மணியோடு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப்போயிருந்த ஊரடங்குச் சட்டவேளை இரவு வேளைகளில் வெள்ளை ஊர்திகள் உறுமித்திரிந்த காலம். இனந்தெரியாத ஆயுததாரிகளின் கோரங்கள் தாண்டவமாடிய காலம். 

நிலாவின் படுகொலையும் இனந்தெரியாத ஆயுததாரிகளின் கைவரிசை என்ற பட்டியலுக்குள்தான் அடங்கிப்போயிருந்தது.  ஊடக மாணவர்களின் பயிற்சி ஒன்றிற்காய் கொழும்பு சென்று சென்று விட்டு வீடு வந்த நிலா மறுநாள் 2007 ஆம் அண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி காலை 5.00 மணியளவில் மோட்டார் வண்டியில் வந்த ஆயுததாரிகளால் அவனது வீட்டில் வைத்து சுடப்பட்டான். வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள் நிலாவுடன் கதைக்கவேண்டும் என கேட்க விபரீதம் அறியா அவனது பெற்றோர் வீட்டுக் கதவைத் திறந்துவிட  வீட்டு முற்றம் வரை வந்தபோது அவன் பெற்றொர் முன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

6  

நிலா ஆயுதம் ஏந்திய போராளிஅல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்த ஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம்புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் அவனும் ஒருவன்.  

நிலக்சனின் கனவுகளை தாங்கி ஊடகத்துறையில் சாதிக்கத்துடிக்கும் நண்பர்களுக்கான கௌரவத்தினை வழங்குதலும், சாதிக்கத்துடிக்கும் மாணவர்களை ஊக்குவித்தல், வறிய மக்களின் சமூதாய முன்னேற்ற வளர்ச்சிக்குப் பங்காற்றல் ஆகியவற்றை முன்னிறுத்தி “நிலா நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது. 

நிலா நிதியம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு “அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” என ஆண்டுதோறும் வழங்கிவருகின்றது.

இதேபோல யாழ் ஊடக அமையத்தின் அழைப்பின் பேரில் இந்த ஆண்டு (2019) முதல் யாழ் ஊடக விருது விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருதினை வழங்க பங்களிப்பாற்றிவருகின்றது. குறித்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதன்போது அமரர் சாகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருது தமிழர் தாயகத்தில் புகைப்படத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக திரு. தர்மபாலன் ரிலக்சனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனிடையே நிலக்சனோடு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற நண்பர்களினால் உருவாக்கப்பட்ட நிலா நிதியம் அமைப்பானது தொடர்ந்தும் நிலக்சனது ஞாபகார்த்த பணிகளிலும் சமுதாய முன்னேற்றப்பணிகளிலும் மேலும் உறுதியோடு ஈடுபடும் என தெரிவித்துள்ளது.

தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை – ச. நிலக்ஸன்