தமிழ் ஏதிலி ஒருவர் அவுஸ்திரேலியாவில் மரணம்!

வெள்ளி சனவரி 21, 2022

அவுஸ்திரேலிய மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் ஏதிலி மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

எனினும் அவர் தொடர்பான ஏனைய விடயங்கள் வெளியாகவில்லை.

கடந்த 14ம் திகதி, அவர் நித்திரைக்கு சென்ற நிலையிலேயே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்று அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள் ஏதிலிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இறுக்கமான ஏதிலிக் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதும் இதற்கான காரணம் என்று அரன் மயில்வாகனம் குற்றம் சுமத்தியுள்ளார்.