தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை - பழ. நெடுமாறன் வரவேற்பு!

செவ்வாய் ஜூலை 28, 2020

தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், மொழியியல், மெய்யியல் ஆகிய துறைகளில் முதுகலைப் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000/-ம் உதவித் தொகை வழங்க முன்வந்திருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் அவர்களை உளமாரப் பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மற்றப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க முன்வரும் மாணவர்களுக்கும் இதுபோல் உதவித்தொகை அளிக்க முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் முன்வருவது மிக அரிதாக உள்ளது. எனவே, இதுபோல் உதவித்தொகை அளிப்பதோடு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லாய்வுத் துறை போன்றவற்றில் இம்மாணவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.