தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும்!

புதன் ஓகஸ்ட் 21, 2019

சிறீலங்கா ஜனாதிபதிக்கான தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியிலோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலோ போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்தான் வருவார் என்ற நிலை மாறி, இப்போது மூன்றாவதாக சிறீலங்கா பொதுஜன முன்னணி (பொதுஜன பெரமுன) என்ற கட்சியும் களத்தில் குதித்துள்ளது.

மகிந்த தலைமையிலான சிறீலங்கா பொதுஜன முன்னணியின் வருகை, சிறீலங்காவின் பழம்பெரும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியையே ஆட்டம் காண வைத்துள்ளது.

இப்போது, தன் தந்தையினால் நிறுவப்பட்ட கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்தும் முனைப்பில் சந்திரிக்கா களம் இறங்கியிருக்கின்றார்.

சிறீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச தனது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் மகிந்த தள்ளப்பட்டார் என்பதை கடந்தகால அவரது கருத்துக்களில் இருந்து அறியமுடிகின்றது.

111

தமிழ் மக்களால் இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச மீது, பல்வேறு சிங்களப் பிரமுகர்களின் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன. இவர் ஆட்சிக்கு வந்தால் வெள்ளைவான்கள் ஓடும் என சிங்களத் தரப்பே அச்சப்படும் அளவிற்கு சிங்கள மக்களுக்கும் இவர் ஆபத்தானவராக எச்சரிக்கப்படுகின்றார்.

ஆனால் இவரை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய தகமையுடைய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சியால் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை. யார் போட்டியிடுவது என்ற கடும் போட்டியால் இதுவரை அக்கட்சியினர் ஒருவரையும் உறுதியாகத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறுகின்றனர்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவுக்கு வரமுடியாத அளவிற்கு அக்கட்சி நிலைகுழம்பிக் கிடக்கின்றது. சந்திரிக்கா அதனைத் தூக்கி நிறுத்தி வேட்பாளரை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரு கட்சிகளோ அல்லது மூன்று பேரினவாதக் கட்சிகளுமோ வேட்பாளர்களை நிறுத்தினாலும் சிங்கள மக்களின் வாக்குகள் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கப்போவதில்லை. தீர்மானிக்கப்போவது தமிழர்களின் வாக்குகள்தான்.

இதனைச் சிங்களக் கட்சிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. அதனால்தான் தேர்தல்காலம் நெருங்கிவிட்டால் வடக்கிற்கும், கிழக்கிற்கும் படையயடுக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். கட்டடம் திறப்பதில் இருந்து கழிப்பறை திறப்பது வரைக்கும் தங்கள் வருகையைப் பதிவு செய்கின்றார்கள்.

இவர்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதற்கென்றே தமிழ்க் கட்சிகள் சிலவும் வடக்கிலும், கிழக்கிலும் இருக்கின்றன.

அவர்களின் பொய் வாக்குறுதிகளை தமிழ் மக்களிடம் பரப்புவதில் இவர்கள்தான் பெரும் பங்காற்றுகின்றார்கள்.

கடந்தமுறை ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தமிழ் மக்களுக்கு நல்லிணக்க ஆட்சிய தரப்போகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சூட்டிய மகுடத்தை நம்பி வாக்களித்த தமிழ் மக்கள் இன்றுவரைக்கும் ஓய்வின்றிப் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

காணாமல்போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரிப் போராடும் மக்களின் போராட்ட நாட்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் 1000 நாட்களை எட்டப்போகின்றது. அந்த மக்களை நேரில் சென்று பார்த்து அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை சொல்வதற்குகூட இதுவைர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் முடியவில்லை.

தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களையும், பூர்விக நிலங்களையும் ஆக்கிரமித்து பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான எந்தவொரு முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கையோ அல்லது அழுத்தங்களையோ ஆட்சியில் அமர்த்திய இவர்களால் பிரயோகிக்க முடியவில்லை.

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்ததாக பெருமையடித்த இவர்களால், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு இந்த ஆண்டு கிடைக்கும் அடுத்த ஆண்டு கிடைக்கும் என்று ஏமாற்றியதைத் தவிர உருப்படியாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தமுடியவில்லை.

இதற்குப் பின்னரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களிடம் கோரும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டுமல்ல அவ்விரு பேரினவாதக் கட்சிகளுக்கும் முண்டுகொடுத்து நிற்கும் தமிழ்க் கட்சிகள் எதற்கும் துளியளவுகூட இல்லை.

மீண்டும் பொய் வாக்குறுதிகளை தமிழர்கள் மீது திணித்து, மீண்டும் அவர்களுக்கு வாக்களிக்குமாறு இவர்கள் கோருவார்களாக இருந்தால், தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகிகளாகவே இவர்கள் இருப்பார்கள்.

அதேவேளை, மிகக் கொடூரமான தமிழினப் படுகொலையை நடத்திமுடித்த மகிந்த-கோத்தபாய கூட்டத்திற்கு வாக்ளிக்குமாறு கோரும் தமிழ் அரசியல் கட்சிகளும் சரி, ஏன் ஒவ்வொருவரும் தமிழனும் சரி தமிழின அழிப்பிற்கு துணைபோகும் ஒருவராகவே பார்க்கப்படவேண்டியவர்.

எனவே, சிறீலங்காவில் இருந்து வாக்குறுதிகளுடன் வரப்போகும் மூன்று கட்சிகளும் தமிழ் மக்களிடம் வாக்குகளைக் கேட்கும் தகுதியை இழந்துவிட்டன.அவர்களுக்கு வாக்களித்தும் தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கப்போவதில்லை.

இந்தவேளையில் தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து நகரவேண்டியது கட்டாயமாகின்றது. ஒன்று சிறீலங்காவின் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கவேண்டும். இது நடக்கமுடியாதது அல்ல. விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் இது சாத்தியமானதொன்றாக இருந்தது.

111

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி இத்தகைய தீர்க்கமான முடிவொன்றை தமிழ் மக்கள் எடுப்பார்களாக இருந்தால் அது இன்னொரு வரலாற்றுப் பதிவாக மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் மீதான களங்கத்தையும் போக்கும் வாய்ப்பாகவும் அமையும். விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள் என்ற சர்வதேசத்தின் குற்றச்சாட்டை இது தகர்க்கும்.

இல்லையேல் இரண்டாவது, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்கள் அனைவரும் அவருக்கு தமது வாக்குகளை முழுமையாக அளிக்கவேண்டும். முழுமையாக வாக்களித்தாலும் அவர் வெற்றி பெறப்போவதில்லைத்தான். ஆனால் இந்த உலகிற்கு ஒரு செய்தியை தமிழ் மக்கள் உறுதியாகச் சொல்லமுடியும்.

இந்த இரண்டில் ஒன்றைச் செய்தாலேயே இலங்கைத் தீவில் இரண்டு இனங்கள் இருக்கின்றன என்ற பேருண்மை இந்த உலகிற்குப் புரியும். தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்கான பாதையைத் தக்கவைக்க முடியும்.

இல்லையேல் நல்லிணக்க ஆட்சியில் நல்லது நடக்கும் என்று கடந்த ஐந்து வருடங்களாக இலவு காத்த கிளிகள்போல் காத்திருக்க வைக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னொரு ஐந்து வருட காலங்களுக்கு மீண்டும் இலவு காக்க வேண்டியதுதான். ஆனால், அதற்குள் இலங்கைத் தீவில் தமிழினத்தின் இருப்பு எவ்வளவு தூரம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் என்பது இங்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு