தமிழ் மக்களுக்கு கறுப்புநாள்!

செவ்வாய் பெப்ரவரி 05, 2019

ஓர் இனத்தை அழித்து, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிவிட்டு சிறீலங்கா தனது 71வது சுதந்திரதினத்தை வெகு விமர்சையாக இம்முறையும் கொண்டாடிவிட்டது. சுமார் 25 வருடங்கள் அச்சத்துடன் கொண்டாடிய சுதந்திரதினத்தை கடந்த சில ஆண்டுகளாக எந்தவித அச்சங்களுமின்றி அது கொண்டாடிவருகின்றது.

மறுபுறத்தே தமிழர்களைச் சூழ்ந்த அச்சமும் அடிமை வாழ்வும் இன்னமும் விலகிவில்லை. விலகுவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

விடுதலைச் சூரியனின் வரவை எதிர்பார்த்து தமிழினம் இன்றும் ஏங்கிக் காத்துக்கிடக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடியலையும் மக்களின் போராட்
டம் இன்னும் ஓயவில்லை. அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா என்பதைக்
கூட அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கப்போராடும் மக்களின் தொடர் போராட்டம் 700 நாட்களைக் கடந்து தொடர்கின்றது. நிலங்களை விடுவிப்பதற்கு பதிலாக போராடும் மக்களை அச்சுறுத்துவதில் சிறீலங்கா அரசாங்கப் படைகளும் காவல்துறையும் அதிக கவனம் செலுத்துகின்றன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கப்போகின்றார்கள், எப்போது விடுவிக்கப் படப்போகின்றார்கள் என்பதற்கான எந்தவொரு கால எல்லையைக்கூட சிறீலங்கா அரசால் வழங்கமுடியவில்லை.

கலாச்சாரம், பண்பாட்டைப் பேணிக்காத்த மக்களின் வாழ்க்கை சிதைத்து சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. விடுதலைக்காகப் போராட தங்கள் பிள்ளை
களை வழங்கிய மக்கள் இன்று போதையில் இருந்து தங்கள் பிள்ளைகளை மீட்க வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களைக் கேட்பாரின்றி கைது செய்வதற்கும், சித்திரவதை செய்வதற்கு பயன்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.

சர்வதேச அழுத்தங்களுக்காக பழைய மொந்தையில் புதிய கள் என்பதுபோல, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் என்ற பெயரில் அதன் முகம் மாற்றப்பட்டுவருகின்றது. இது அதனைவிட இன்னும் கொடுமையாக தமிழர்களுக்கு அமையப்போகின்றது என்பதற்கு இப்போதே எச்சரிக்கை மணிகள் அடிக்கத்தொடங்கிவிட்டன.

பெளத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் தமிழர் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. வலுக்கட்டாயமாக, அடாத்தாக தமிழர் நிலங்களில் அவை நிறுவப்படுவதை தடுத்து நிறுத்தும் பலம் தமிழர்களிடம் இல்லாமல்போனதால் தமிழர் நிலங்கள் பெளத்தமயமாகி வருகின்றன.

தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலும், வன இலாகா என்ற பெயரிலும் தமிழர் நிலங்கள் அரச திணைக்களங்களால் பறித்தெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்களக் குடியேற்றங்களுக்கு மட்டும் தடையின்றி அனுமதிக்கப்படுகின்றன. இதனால் மெல்ல மெல்ல தமிழர் தாயகம் சிங்கள தேசமாக மாற்றப்பட்டுவருகின்றது.

தமிழ் மொழியை திட்டமிட்டுச் சிதைத்துவரும் அதேவேளை, சிங்கள மொழி ஆதிக்கத்தை தமிழர் தேசத்தில் வலுக்கட்டாயமாகத் திணித்து வருகின்றது. சிங்களம் தெரியாமல் அரசபணியில் சேரமுடியாது என்ற சிந்தனையை தமிழர்கள் தலைக்குள் இறுக்கமாக இறக்கியும் வருகின்றது.

தமிழர் தேசம் சிங்கள மயமாக்கப்பட்டு, தமிழர்களை பெளத்த, சிங்களவர்களாக மாற்றும் நடவடிக்கைகளுக்கான அத்திவாரத்தை சிறீலங்கா கடந்த பத்தாண்டிற்குள் மிக உறுதியாக அமைத்துவிட்டது.

இந்த அத்திவாரத்தைத் தகர்த்தெறிந்து தங்களின் இனத்துவ அடையாளத்தை பாதுகாத்து, தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை நிறுவுவதென்பது தமிழர்களுக்கு இனிவரும் காலங்களில் அத்தனை இலகுவானதல்ல.

இப்போது சிறீலங்காவிற்கு எஞ்சியிருப்பது தமிழர்களை சுதந்திரதினத்தை எழுச்சியோடு கொண்டாட வைக்கவேண்டிய ஒன்றுமட்டும்தான். அதனையும் கொண்டாடிவிட்டார்கள் என்றால் அவர்கள் தங்கள் சுதந்திரத்தை மறந்து தங்களுடன் ஒன்று கலந்துவிடுவார்கள் என்று சிங்கள ஆட்சியாளர்கள் எண்ணுகின்றார்கள்.

அதனைப் புரிந்துகொண்டுதான் இம்முறை அதன் பெயரைமாற்றி கொண்டாட வைக்கமுனைந்தது. சுதந்திரதினம் என்றால்தான் அதனைப் புறக்கணிக்க
வேண்டும். அதனைத் தேசிய தினமாக்கிவிட்டால் யாரும் புறக்கணிக்கவேண்டிய அவசியம் இருக்காது.

அதனால்தான், தங்கள் சுதந்திரதினத்தை தேசிய தினமாக அறிவித்து இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த மக்களையும் கொண்டாட வைப்பதற்கு சிறீலங்கா இம்முறை முயற்சி எடுத்திருந்தது.

அரசமைப்பில் சுதந்திர தினம் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ம் உறுப்புரைக்கமைய இது தேசிய தினம் என்றும் அமைச்சர்களைக் கொண்டு அறிவித்தது.

சிறீலங்காவின் சுதந்திரதினத்தையோ, தேசிய தினத்தையோ தமிழ் மக்கள் கொண்டாடவேண்டிய அவசியம் இல்லை. மோதகம், கொழுக்கட்டை என பெயர்
களை மாற்றினாலும் சிறீலங்காவின் சுதந்திரதினம் என்பது தமிழ் மக்களின் இருள் வாழ்வு அகன்று விடுதலைச் சூரியன் உதிக்காத வரை தமிழ் மக்களுக்கு அதுவொரு ஒரு கறுப்பு நாளே.

அதனைப் புரிந்துகொண்டே தமிழர்கள் அந்தத் தேசிய தினத்தையும் புறக்கணித்து கறுப்பு நாளாகப் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு