தமிழ் பேசுபவர்களைக் வைத்து தமிழர்களை பிரித்தாளும் பேரினவாத அரசியல் !

வெள்ளி ஏப்ரல் 05, 2019

சிறீலங்காவின் அதிபராக பதவியேற்ற போது மாகாண ஆளுநர்களாக இலங்கை நிர்வாக சேவையிருந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களைத்தான் நியமிப்பேன் என்று அடம்பிடித்த மைத்திரிபால, விசுவாசமாக இருப்பார்கள் என்று கருதிய தனக்கு வேண்டிய அரசியல்வாதிகளை மாகாண ஆளுநர்களாக நியமித்து இனங்களுக்கிடையில் முறுகல்நிலையை ஏற்படுத்தியது மாத்திரமில்லாது, சிங்களப் பேரினவாதம்

எதனை சாதிக்க முயற்சித்ததோ அதனை இன்று நடைமுறைப்படுத்தியிருக்கின்றார்.

இலங்கையில் இனி ஒரு யுத்தம் நடக்க அனுமதிக்க விடமாட்டேன், இனரீயான செயற்பாடுகளை அனுமதிக்க மாட்டேன், தமிழர்களுக்கு செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வேன் என்று கூறிய சிறீசேன இன்று தமிழர்களுக்கு எதிராக செய்யும் செயற்பாடுகள் மூலம் அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பது தமிழர்கள் புரிந்துள்ளார்கள்.

இதுவரை காலமும், தான் மக்களின் ஜனாதிபதி என்ற போர்வையை போர்த்தியபடி இருந்த ஜனாதிபதி அண்மைக் காலமாக அப்போர்வையை விலக்கி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஒரு முறைதான் ஜனாதிபதி ஆசனத்தை அலங்கரிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர், இன்று மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கோண்டுள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை சிறீலங்காப் படையில் இருந்து ஓய்வு பெற்ற சிங்களவர்களே ஆளுநர்களாக செயற்பட்டனர். நிர்வாக திறமை மிக்கவர்கள் தமிழ், முஸ்லிம் சமுகங்களில் பலர் உள்ள போதிலும் இனவாதங்களைப் பேணக்கூடியவர்களை நியமித்தமை உள்நோக்கம் கொண்டவை.

இந்நியமனமானது தனது அரசியல் இருப்புக்காகவும், தமிழ் மக்களையும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையும் பழிவாங்கும் நோக்கோடு, கடந்த ஜனவரி மாதம் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகித்தான் இப்பதவியைப் பெற்றார்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் சம்பாதிப்பனவாகவே அமைந்துள்ளன. குறிப்பாக ஓட்டமாவடி காணி அபகரிப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயம் போன்றவற்றை குறிப்பிட்டுக் கூறலாம்.

இதன்படி ஜனாதிபதியின் விருப்பத்தின்படி தனது பிரதிநிதியாக மாகாணமொன்றின் ஆளுநர் நியமிக்கப்படுகின்றார்.

ஆதலால் தனித்துவமான பல அதிகாரங்களையும் அவ் ஆளுநர் தன்வசம் கொண்டுள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தின் 154ளீத 154ய் இன் ஒன்று தொடக்கம் ஆறு வரையான பந்திகள், மற்றும் 164 போன்ற சரத்துகளில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குவிக்கப்பட்டனவாகவுள்ளன.

சபையில் நிதி சார்ந்த எந்த ஒரு சட்ட மூலத்தையும் கொண்டு வருவதாக இருந்தாலும் அதை ஆளுநருடைய அதிகாரம் இல்லாமல் கொண்டுவர முடியாது. இது 90 இற்கும் மேற்பட்ட சட்டமூலங்களை பாதிக்கின்றது.

பொதுவாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவி வருகின்றது. அதிலும் யார் முதல்வர் என்கின்ற போட்டி வேறு. இவ்வாறிருக்க முஸ்லிம்கள் சார்பாக மாத்திரமே கடந்த கால செயற்பாடுகளை பதிவு செய்திருக்கும் ஹிஸ்புல்லா போன்ற ஒருவர் தமிழ் மக்களினதும், அவர்கள் சார்பாக மாகாண சபைக்குள் செல்லும் பிரதிநிதிகளதும் அபிலாசைகளை எவ்வாறு பூர்த்தி செய்வார்?

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமனமானது ஒரு சமூகம் சார்ந்து செயற்படுவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டது. அதுமாத்திரமல்ல அதனைப்பார்த்துக்கொண்டிருக்காது என்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு ஆளுநர் வெளிப்படையாகவே பேரினவாத சக்திகளின் விருப்பதையும் தனது இனம் சார்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகிறார். ஆனால், இதனை தமிழ்த் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களில் அவர் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் அவரின் சமூகம் சார்ந்ததாகவும், தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பெரும்பான்மை மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தனது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை கிழக்குமாகாண தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமக்கு வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியை பயன்படுத்தி வாழைச்சேனையில் கோயில் காணியை பள்ளிவாசல் மற்றும் சந்தையாக கட்டிவித்தேன் என பேசியமை, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளமை. தனக்கு சார்பாக நீதிமன்ற தீர்ப்பை மாற்றினேன் என பேசியமை, வட கிழக்கு இணைக்கப்படால் இரத்த ஆறு ஓடும் என நாடாளுமன்றில் பேசிய பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்ற பின்னர் கல்முனை சிறீ சுபத்திரராமய விகாரைக்கு சென்று, விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து விகாரை மற்றும் சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றினை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன மத பாகுபாடின்றி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தர்.

ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 349 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதில், அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் 203 பட்டதாரிகளுக்கும் திருகோணமலையில் சிங்கள மொழி மூலம் 74 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூல இணைந்த மொழி ஆசிரியர் நியமனம் 23 பேருக்கும் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 பட்டதாரிகளுக்கு தமிழ் மொழி மூல இணைந்த மொழி ஆசிரியர் நியமனம் 18 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழி மூல இணைந்த மொழி ஆசிரியர் நியமனம் 16 பேருக்கும் வழங்கப்பட்டன.

இதேபோன்று பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள்  கிழக்கு மாகாண ஆளுநரினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து பிரித்து பொத்துவிலிலும், அம்பாறை கல்வி வலயத்தில் இருந்து பிரித்து உஹணையிலும் உருவாக்க ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒன்று சிங்களவர்களுக்கும் மற்றையது தனது சமூகம் சார்ந்தவர்களுக்கும். தற்போது கிழக்கு மாகாணத்திலே 17 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. ஆளுநரின் அங்கீகாரத்தோடு 19 ஆக மாற்றப்பட இருக்கின்றது.

இக்கல்வி வலயங்களுக்கான ஆளனி உத்தியோகத்தர்கள் சிங்கள, முஸ்லீம் சமூகங்களைச் சார்ந்தவர்களே நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளுடாக எவ்வாறு இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது? கொழும்பு அரசாங்கம் தமிழர்களை பிரித்தாளுவதில்தான் கரிசனை காட்டுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கி இங்கு காணப்படும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளை இன்னும் முன்னெடுக்கவில்லை என்பது நன்குப் புலப்படுகிறது.

ஐ.நாவையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக ஒரு சில வேலைகளை செய்தாலும் பெரும்பாலன செயற்பாடுகள் தமிழர்களுக்கு எதிரானவையாகவே உள்ளன.

எனவே, தமிழர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதன் மூலமாகத்தான் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளமுடியுமே தவிர எவரையும் நம்பி எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பது யதார்த்தம். 

-கிழக்கில் இருந்து எழுவான்-

நன்றி-ஈழமுரசு