தமிழ் படத்தை பார்க்கும் போது மட்டும் ஏன் தமிழ் நாகரீகம் தெரியவில்லை- சீமான்

வியாழன் பெப்ரவரி 13, 2020

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாலுமகேந்திராவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், சீமான், அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் பல சுவாரஸ்ய விசயங்களை பேசியுள்ளனர்.

அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, மூடு பனி, வீடு, முள்ளும் மலரும், தலைமுறைகள் என பல படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலுமகேந்திரா. 1939ம் தேதி மே 20ம் தேதி பிறந்த பாலுமகேந்திரா, கடந்த 2014ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பாலுமகேந்திராவின் நினைவுகளை அசைபோடும் விதமாக சென்னையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சீமான்,அமீர் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் சுவாரஸ்யமான பல நினைவலைகளை அசை போட்டனர்.

பாலுமகேந்திராவுக்கு தமிழ்நாடு அரசு ஏன் வீடு கட்டி தரவில்லை என்ற கேள்வியை எழுப்பிய சீமான்,தனது தலைவனுக்கு பிடித்த தமிழ் இயக்குநர் பாலுமகேந்திரா தான் என்ற விஷயத்தையும் போட்டு உடைத்தார்.
இயக்குநர் அமீருக்கும்,பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, அமீரின் ராம் பட நிகழ்ச்சிக்கு பாலுமகேந்திரா கலந்து கொள்ளவில்லை என்ற தகவலையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

மேலும்,பிரெஞ்சு படம் பார்க்கிறோம்,பிரெஞ்சு நாகரீகம் தெரிகிறது. கொரிய படம் பார்க்கிறோம் கொரிய நாகரீகம் தெரிகிறது. ஆனால், தமிழ் படத்தை பார்க்கும் போது மட்டும் ஏன் தமிழ் நாகரீகம் தெரியவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சீமான்,கலை, அரசியலை போற்றாத அரசு ஒரு போதும் வாழவே வாழாது என்றும், கலைத் துறையில் சாதிக்கும் கலைஞர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.