தமிழ் வாழ வேண்டுமா? கன்னடம் வாழ வேண்டுமா? எங்களுக்கு வாக்களியுங்கள்!

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், பாரதீய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தலைவருமாகிய தேஜஸ்வி சூர்யா, திமுகவை இந்து விரோத கட்சியென்றும், தமிழ் வாழ வேண்டுமெனில், கன்னடம் வாழவேண்டுமெனில் ஹிந்துத்வா வெற்றிபெற வேண்டும் எனவும் சேலத்தில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட முன்னேற்ற கழகத்தை "இந்து விரோத" கட்சி என்று குறிப்பிட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, 

தேர்தலில் மக்கள் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றும், பாஜக மட்டுமே இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளையும் மதித்து, அவற்றின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக பேசியிருக்கிறார்.

தமிழக பாஜகவின் இளைஞரணி சார்பில் சேலத்தில் நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் அந்த கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் முருகன், துரைசாமி, அண்ணாமலை, எச்.ராஜா, ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.