தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால வெளிநாட்டு செயற்பாட்டாளர் ரைகர் பாலா இலண்டனில் சாவைத் தழுவினார்!

திங்கள் ஏப்ரல் 27, 2020

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால வெளிநாட்டு செயற்பாட்டாளராக விளங்கிய ரைகர் பாலா எனப்படும் நடராஜா பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார்.

 

1983ஆம் ஆண்டு கறுப்பு ஆடி இனவழிப்பு இடம்பெற்ற பொழுது மத்திய கிழக்கில் பொறியியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரைகர் பாலா அவர்கள், அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக மாறியதோடு, 1984ஆம் ஆண்டு இந்தியா சென்று சென்னையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் சந்தித்தார்.

 

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களில் ஒருவராக மாறிய ரைகர் பாலா, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடுகளை விற்பனை செய்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அபுதாபியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதன் காரணமாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் ரைகர் பாலா என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.

 

சிறையில் இருந்து வெளிவந்ததும் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த ரைகர் பாலா, அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகத் திகழ்ந்து, 1993ஆம் ஆண்டில் மீண்டும் செயற்பாட்டாளராக மாறினார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களாக இருப்பதற்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படும் களத்தில் பத்திரிகையை விற்பனை செய்யும் பணியைத் தான் வசித்து வந்த தென்மேற்கு இலண்டன் குறொய்டன் (Croydon) பிரதேசத்தில் மேற்கொண்ட ரைகர் பாலா அவர்கள், பின்னர் சிங்களப் படைகளிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காகப் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையைத் தொடர்ந்து 1995ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கான பணிகளிலும், அதனைத் தொடர்ந்து ஜெயசிக்குறுய் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘திலீபனின் நினைவாகத் தொப்புள் கொடி உறவுகளுக்காக’ என்ற செயற்பாட்டிலும் தன்னை ஈடுபடுத்தினார்.

 

அத்தோடு கிழக்கு இலண்டன் ஈஸ்ற்ஹாமில் (Eastham) அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தில் களத்தில் பத்திரிகையின் ஒப்புநோக்குநராக சிறிது காலம் பணிபுரிந்த ரைகர் பாலா அவர்கள், 1996ஆம் ஆண்டின் இறுதியில் லெப்.கேணல் நாதன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரித்தானிய கிளையின் நிதி திரட்டல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 

அக்காலப் பகுதியில் ஈழம் இல்லத்தில் இருந்து வெளிவந்த ஹொற் ஸ்பிறிங்க் (Hot Spring) சஞ்சிகையிலும் ரைகர் பாலா அவர்கள் பணிபுரிந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானிய கிளைச் செயற்பாட்டாளர்களில் வயது முதிர்ந்த ஒரு சிலரில் ரைகர் பாலா அவர்களும் ஒருவர் என்பதால் அவரது அணுகுமுறையும், கிளைச் செயற்பாடுகள் தொடர்பான அவரது விமர்சனங்களும் சக செயற்பாட்டாளர்கள் சிலருக்குக் கசப்பான அனுபவங்களைக் கொடுத்தாலும் தமிழீழ தேச விடுதலை மீதான அவரது பற்றுறுதி குறித்து எக்காலத்திலும் எவருக்கும் ஐயம் ஏற்பட்டதில்லை.

 

2002ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதும், வன்னி சென்ற ரைகர் பாலா, அங்கு அப்பொழுது வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவுப் (பின்னர் அனைத்துலகத் தொடர்பகம்) பொறுப்பாளராக விளங்கிய வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களை சந்தித்து, அவரது ஆலோசனைக்கு இணங்க வன்னியில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை ஆகிய சிறுவர் காப்பகங்களில் பணிபுரிந்ததோடு, 2003ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறிது காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார்.

 

இதன் பின்னர் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணனின் பணிப்புரைக்கு அமைய தென்னாபிரிக்கா சென்று, சிறிது காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்னாபிரிக்க கிளையோடு இணைந்து அரசியல் நடவடிக்கைகள் சிலவற்றிலும் ஈடுபட்டார்.

 

பின்னர் பிரித்தானியா திரும்பிய ரைகர் பாலா அவர்கள், அனைத்துலக தொடர்பகத்திற்கான உதவிகளை வழங்கி வந்ததோடு, பிரித்தானியாவில் ஒரு பேப்பர் பத்திரிகையின் உருவாக்கத்திற்கு உந்துதலாக அமைந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக ஒரு பேப்பர் பத்திரிகையில் ஆங்கிலத்தில் அரசியல் கட்டுரைகள் சிலவற்றையும் ரைகர் பாலா அவர்கள் எழுதினார்.

 

2009 வைகாசி 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் மற்றும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் திட்டமிட்ட வகையில் இந்திய – சிங்களப் புலனாய்வாளர்களால் உடைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பிரித்தானியாவில் முன்னணித் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலருடன் ரைகர் பாலா அவர்கள் முரண்பட்டிருந்த பொழுதும், தேசிய விடுதலை பற்றிய சிந்தனையில் இருந்து ஒரு பொழுதும் அவர் தடம்புரண்டு சென்றது கிடையாது.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் போன்ற பெயர்களில் புலம்பெயர் தேசங்களில் காகிதப்புலிக் கும்பல்கள் உருவாகிய பொழுது, செய்வதறியாது திணறிய செயற்பாட்டாளர்கள் பலரில் ஒருவராகிய ரைகர் பாலா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் 1994ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியைப் பிரித்தானியாவில் புதிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார்.

 

அவரது இந் நடவடிக்கை அக்காலப் பகுதியில் விமர்சனத்திற்கு ஆளாகினாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேவிப் பிரித்தானியாவில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு தான் செய்ததாகப் பின்நாட்களில் அவர் விளக்கமளித்தார்.

 

சலரோகம் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பொழுதும், தனது தள்ளாத வயதிலும் தமிழீழ தேசப்பற்றோடு நீண்ட காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளராகப் பணிபுரிந்த ரைகர் பாலா அவர்கள், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் டெமென்ற்சியா (dementia) எனப்படும் மூளைத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார்.

 

இதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண முடியாமல் அடிக்கடி ரைகர் பாலா அவர்கள் சிரமப்பட்டாலும், அவரைப் பார்ப்பதற்கு மூத்த செயற்பாட்டாளர்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது உடனே அவர்களை அடையாளம் கண்டு அளவளாவி வந்தார்.

 

இந்நிலையில் அவரது உயிர் கடந்த 25.04.2020 சனிக்கிழமை பிரிந்தது.

 

தமிழீழ தேசத்தை ஆழமாக நேசித்த ஒரு தேசாபிமானியான ரைகர் பாலா அவர்களின் இழப்பு, அவரோடு நெருங்கிப் பழகிய மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பலரைத் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ரைகர் பாலா என்ற தேசப்பற்றாளனின் தமிழீழ தேச விடுதலைப் பணிக்கு, ஈழமுரசு, சங்கதி-24, தமிழ்க்கதிர், Tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமைப்பான ஊடக மையம் தலைசாய்த்து நிற்கின்றது.