தமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென்மார்க் 2020

சனி நவம்பர் 28, 2020

இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்! மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள்.

-தழிழீழ தேசிய தலைவர்

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டு இருக்கிறது.  இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவு, எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக, எமது போரளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்க சக்தியாக அமைந்து விட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள், சுகந்திரச் சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள். எமது இனத்தின் சுகந்திரத்திற்காக, சுய கௌரவத்திற்காக, பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் (தியாகிகள்) காலம், காலமாக எமது இதயக் கோவிலில் வைத்துப் பூசிக்கபடவேண்டியவர்கள்.

 27.11.2020 டென்மார்க்கில் வழமையாக நடைபெறும் இரு மண்டபங்களில்   கொரோனா தொற்று பரவல்   மற்றும் அரச சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மிகவும் உணர்வு பூர்வமாக இன்றைய சூழ்நிலையிலும் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தை செலுத்த மக்களும் இளையோரும் பொருமளவு கலந்து கொண்டனர்.  முதல் நிகழ்வாக பொதுச் சுடரேற்றப்பட்டு ,தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன்,   எமது தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டு வரலாற்று மாவீரர் நாளின் உரையின் தொகுப்பு இடம் பெற்றது.  ஒரு மணித்துளிகள் மணியொலி எழுப்பப்பட்டு, தமிழீழ மண் மீட்பு போரில் தமது இன்னுயிர்களை வித்தாகிய மாவீரச் செல்வங்களுக்கு அகவணக்கத்துடன் தொடர்ந்து முதல் மாவீரர் லெப் கேணல் சங்கர் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது.

மாவீரர் மற்றும் நாட்டுப் பற்றாளர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது உறவுகளுக்கு ஈகச்சுடரேற்றினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தினார்கள்.

தொடர்ந்து  மாவீரர் பாடல்கள், கவிதைகள், பேச்சுகள் இடம் பெற்றன. உங்கள் உயிரினும் மேலான குழந்தைகளும், எமது சக போராளிக்களுமான இம் மாவீரர்களின் தியாகம், அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால், என்றுமே மறைக்கப்பட முடியாதவையாகும், புனிதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். காலம், கலாமாக நினைவு கூர்ந்து, என்றும் போற்றப்பட வேண்டிய வீரம் மிகு புனித நாளாகும்.

இம் மாவீரர்களின் நினைவுகள், எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் எம்முடன் கூடவே இருக்கும், மாவீர்களின் இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது, எமது மக்களின் வரலாற்று சுவடியகவும், பண்பாட்டுக்கு உரியவையாகவும் வளர்ந்து நிற்கும்.

 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தன, இறுதி நிகழ்வாக கொடியிறக்கம் இடம் பெற்று தமிழரின் தாரக மந்திரமான "தமிழரின் தாகம்  தமிழீழத் தாயகம் " என்ற உறுதி மொழியுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.