தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை!

புதன் பெப்ரவரி 27, 2019

தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை மற்றும் ஈழத்தமிழர்களின்  சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே  இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தையும் ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியையும் வழங்க முடியும்.   ஐநா அங்கத்துவ நாடுகளிடம் தமிழ்த் தேசிய  அரசியற்  செயற்பாட்டாளர்கள்  கூட்டாக    வலியுறுத்து.

ஐநா மனிதவுரிமை பேரவையின் 40. அமர்வை முன்னிட்டு சிறிலங்கா அரசின் விடயமாக  தமிழ்த்  தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள்  கடந்த வாரம் யெனிவாவில் உள்ள  பல  ஐநா அங்கத்துவ நாடுகளின் தூதரகங்களுடன்  முக்கிய உயர்சந்திப்புகளை மேற்கொண்டு பன்னாட்டு சுயாதீன விசாரணை ஒன்றே  தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை பெற்றுத்தரும் எனவும், இம்முறை சிறிலங்கா அரசுக்கு இணைநாடுகள் மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் கொடுக்கும் செய்திகள் வலுப்பெறும் நிலையில் , இது பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையும் , ஐநா மீது இன்றும் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றாக தகர்த்தெறிவதாக  அமையும் என்பதை  எடுத்துரைத்தனர். 

2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. அந்த தீர்மானத்தில் முக்கியமான கூறு 30/1. அதில் உள்ளடக்கப்பட்ட  விடயங்கள் தொடர்பாக  சிறிலங்கா அரசு  சற்றும் செயற்படவில்லை மாறாக சர்வதேசத்தை ஏமாற்றும் முகமாகவும் தொடர்ச்சியாக 2017 ஆண்டு போன்று மீண்டும் கால அவகாசத்தை கோருவதற்கு பாதிக்கப்பட்ட மக்களால்  ஏற்றுக்கொள்ளப்படாத   சில பொறிமுறைகளையே முன்னெடுத்தனர் என கூறப்பட்டது. 

அத்தோடு  தாயகத்தில் இன்றும் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பாகவும் , தமிழர் தாயகத்தில் நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. ஐநா மீண்டும் சிறிலங்காவுக்கு இரண்டு  வருட கால அவகாசம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் அது தொடரும் இரண்டு வருட கால தமிழின அழிப்பையே அடையாளப்படுத்தி நிற்கும் என்பதை கவனத்திற்கு கொண்டுவந்தனர்.