தமிழின அழிப்பு மே 18 இன் 10 ஆம் ஆண்டு நினைவு கூரலிற்கான ஆலோசனைச் சந்திப்பு !

செவ்வாய் ஏப்ரல் 02, 2019

அனைத்து அமைப்புக்களுக்குமான அழைப்பு ….

உலகம் கள்ள மௌனத்துடன் பாராமுகமாக பார்த்திருக்க சிங்களம், தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாள் 2009 மே 18.

அற வழி நின்று போராடிய தமிழினத்தினை போர் அறத்திற்குப் புறம்பாக கொன்றொழித்து ஆயுதப் போராட்டத்தைமௌனிக்கச் செய்து 10 ஆண்டுகள் கழிந்து விட்டன. இக்கால இடைவெளியில் ஏற்பட்ட அரசியல் வெளியில் திசைதெரியாது நாம் எமக்குள் முரணான கருத்துக்களை வளர்த்து அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருப்பது யதார்த்த நிலையாகி உள்ளது. இது ஒரு கசப்பான உண்மையுமாகும்.

சிங்களம் எத்தனை கட்சிகளாக எத்தனை பிரிவுகளாக இருந்தாலும் தமிழினத்தின் வேர் அறுத்து இலங்கைத் தீவை  சிங்களமயமாக்குவதில் ஒன்றுபட்டு நிற்பதை சமகால அரசியல் நிலைமைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றது.  பன்னாட்டு சமூகமும் தனது நலனில் அக்கறை கொண்டு சிங்களத்தின் செயற்பாட்டை கருத்தில் கொள்ளாதுள்ளது.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகஅரங்கில் உரத்துச் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பு புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் கையிலேயே உண்டு. இன்று தொடர்சியான மக்கள் போராட்டங்கள் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. அவை பாதுகாப்புப் படையினர்களாலும், புலனாய்வாளர்களாலும் தடங்கல்களையும் மிரட்டல்களையும் ஏற்படுத்திய போதிலும் அதற்கெதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கு இணையாக தாயகப் போராட்டங்களுக்கு உரம் சேர்க்கும் வகையில் எமது போராட்டங்கள் அமையவேண்டும். எம்மிடையே உள்ள கருத்து முரண்களுக்கு முன்னுரிமை கொடுக்காது தமிழ் மக்களாய் ஒன்றுசேரல் வேண்டுமென்ற குரல்கள் பலதிசைகளிலும் எழத் தொடங்கியுள்ளது. இக்குரல்களுக்கு மதிப்பளித்து  மே 18ஐ எழுச்சியாக உலகிற்கு சொல்லவும், எமது மக்களின் வலிகளையும், சோகத்தையும் அறிவிக்கவும் தமிழ் மக்களாய் ஒன்று கூடுவோம்.

இதற்கான ஆலோசனைச் சந்திப்பிற்கு அனைத்து அமைப்புகளையும், சங்கங்களையும் அன்போடு
அழைக்கின்றோம். 

ஒரு பொது வேலைத் திட்டத்தில் நாம் கருத்து முரண்களை மறந்து ஒன்று கூடுவோம். இது எமக்கான
போராட்டத்திற்கு பல வழிகளை திறக்குமென்ற நம்பிக்கையில்.

இடம் : – 50 Place de Torcy , 75018 Paris.
Metro : Marx Dormoy. 
காலம் : – 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி.