தமிழினத்தை சூழ்ந்துள்ள இன்னொரு இனப் பேரழிவு மீளும் வழி யார் கையில்?

செவ்வாய் பெப்ரவரி 05, 2019

தமிழீழம் எங்கள் தாய்த்திருநாடு, தனித்தமிழீழமே எமது உயிர் மூச்சு, அப்பழுக்கற்ற தேசம் ஒன்றைக் கட்டி எழுப்பி நாம் அதில் எங்களை நாங்களே ஆட்சி செய்வோம் என்ற உயரிய சிந்தனைகளுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டு அதில் பெரு வெற்றியும் பெறப்பட்டது.

தமிழர் தாயகத்தில் ஏறக்குறைய இரு தசாப்த காலம் தனியான தமிழீழ அரசு செயற்பட்டது. நீதி, நேர்மை, சுதந்திரம், பக்கச்சார்பின்மை, இலஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகம், போதைக்கு அடிமையற்ற மக்கள் கூட்டம், தனியான கலை, கலாசாரம் போன்ற இன்னோரன்ன அனைத்துத் துறைகளும் தமிழீழத்தில் நேர்மையாக இயங்கின.

தமிழ் மக்களில் அக்கறையானவர்கள் தமிழ் மக்களை ஆட்சி செய்தனர். தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தன்னை ஒரு தலைவனாக அன்றி மக்கள் தொண்டனாகவே கருதினார். தளபதிகள் போராளிகளையும் மக்கள் தொண்டர்களாக மாற்றினார். போராட்டம் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் தமிழர் தாயகம் தன்னெழுச்சி பெற்றது.

தமிழீழம் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்தது.

அதற்கேற்றாற்போல மக்களும் செயற்பட்டனர். உற்பத்திகள் சிறப்பாகவே நடைபெற்றன. அதற்கு ஏற்றாற்போல அவ்வப்போது ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
ஆனால், இன்று அதே தமிழர் தாயகம், தமிழர்களின் உயிரினும் மேலான தமிழீழ தேசம் கயவர்களால் கபளீகரம் செய்யப்பட்டு கட்டுப்பாடற்ற, திட்டமிட்ட ரீதியிலான சீரழிப்புக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

முக்கியமாக நாம் அடிக்கடி கவனம் செலுத்தும் போதைப்பொருள் பாவனை இங்கே கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கின்றது.

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிக்கவேண்டும்.

அதன் பின்னர் அந்த இனத்தின் இருப்பு தானாகவே அழிந்துவிடும். இது பல நாடுகளில் நடை
பெற்றிருக்கின்றது. இதே முறையை இன்று சிங்கள தேசம் தமிழர் தாயகத்தில் செய்து
கொண்டிருக்கின்றது.

தமிழ் இளைஞர், யுவதிகளில் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நாளாந்தம் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக, வடதமிழீழத்தில் இச்செயற்பாடு அதிகமாகியுள்ளது.

இன்று தமிழீழத்தின் நகரங்கள் தொடக்கம் குக்கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் பல்வேறு வகையான போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இளைய தலைமுறை போதைக்கு அடிமையான சமூகமாக மாற்றப்பட்டு வருகின்றது.

யார் எதைக் கூறினாலும், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில், ஒரு கட்டமைக்கப்பட்ட குழுவினால் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன என்பதில் மாற்றுத் கருத்திற்கு இடமில்லை.

வடக்கில் உள்ள முப்படையினரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். இந்தியா உட்பட பிற தேசங்களில் இருந்து கடல் மார்க்கமாக தினமும் கஞ்சா, யஹரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

வட தமிழீழத்தின் கரையோரங்கள் ஊடாக பல முகவர்கள் இப்போதைப்பொருட்களைக் கொண்டுவருகின்றனர். இவர்களுக்கும் படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் உள்ளன. மாதகல், காரைநகர், கொழும்புத்துறை, பருத்தித்துறை, மன்னார், முல்லைத்தீவு போன்ற பெருங்கடல் சூழ்ந்த பகுதிகள் ஊடாகவே போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக கையூட்டு வழங்குகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருட்களுடன் சிலர் கைது செய்யப்படுகின்றனர். போதைப்
பொருள் கடத்தல்காரர்கள் திட்டமிட்ட ரீதியில் தமது விசுவாசிகளைக் காவல்துறையினரிடம் சிக்கவைத்துவிட்டு சில வருடங்களின் பின்னர் அவர்களைச் சிறைமீட்கின்றனர். சில சந்தர்ப்
பங்களில் காவல்துறையினருக்கு கையூட்டு வழங்க மறுப்பவர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.

போதைப்பொருட்கள் பெரும் முதலாளிகளிடம் இருந்து குட்டி முதலாளிகளுக்கு கைமாறு
கின்றது. அவர்கள் கிராமங்களில் உள்ள இளைஞர்களைத் தம்வசப்படுத்தி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதேபோன்றே, கசிப்பு உள்ளிட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை தாராள
மாகவே  இடம்பெறுகின்றது. கடந்த காலங்களில் எவருக்கும் தெரியாமல் மறைத்து விற்பனை செய்யப்பட்ட மேற்படி சட்டவிரோத மதுபானங்கள் தற்போது பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன.

பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாக்கப்படுகின்றனர். இனிப்புப் பண்டங்கள், உணவு வகைகளுக்குள் போதைப்பொருள் கலந்து பாடசாலைச் சூழலில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது. மாணவர்களை இலகுவாகவே போதைக்கு அடிமையாக்கும் செயற்பாடு கனகச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றது.

இனத்தைக் கருவறுக்கும் இந்தச் செயற்பாடுகள் அரச அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. காவல்துறையினருக்கு தெரியாமல் இல்லை. மதுவரித் திணைக்களத்திற்கு தெரியாமல் இல்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் இல்லை. அனைவருமே வேடிக்கை பார்க்கின்றனர்.

சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளனர்.

அண்மையில், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தனது சகாக்கள் சிலரை விடுவிக்கு
மாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காவல்துறையினரை மிரட்டியிருக்கின்றார். உயர் காவல்துறை அதிகாரிகளுடன் பேசி அவர்களை விடுவித்திருக்கின்றார்.

தமிழ் அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்கின்ற பல சட்டத்தரணிகள் போதைப்பொருள் விற்பனையாளர்கள், வாள்வெட்டு குழுக்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோ
ருக்கு ஆதரவாக நீதிமன்றுகளில் முன்னிலையாகின்றனர் என பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

சிங்கள தேசத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஒரு தீர்க்கதரிசியாக வெளிப்
படுத்திக்கொண்டிருக்கின்றார். போதைக்கு எதிரானவன் என்ற சாரப்பட அடிக்கடி அவரின் கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றார்.அதே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் அடிமட்டச் செயற்பாட்டாளர்களும் நாட்டின் பல இடங்களில் மதுபான விற்பனை நிலையங்களை நடத்திவருகின்றனர்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் திருகோணமலையில் பெரியளவிலான மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நடத்திவருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியில் மதுபான விற்பனை நிலையம் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாரத்தில், கிளிநொச்சியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவன் தனது வீட்டுக்கு அண்மையில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டியதை அடுத்து அந்த மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

முதலில் அவனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அவன் தாக்கப்பட்டு படுகாயமடைந்து தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.

ஆனால், பாடசாலைகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வைச் செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

மாணவன் தாக்கப்பட்ட பின்னர் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு போதைக்கு எதிரான கருத்
துக்களை வெளியிட்ட அவர், போதைப்பொருள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபடும் குழுவொன்றினால் தாக்கப்பட்ட தமிழ் மாணவன் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமையில் இருந்து சிங்கள தேசத்தில் திட்டமிட்ட சதி முயற்சி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் உடனடியாகவே சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, விசாரணைக் குழுக்களை அமைத்து திட்டங்களைச் செயற்படுத்தும் சிங்களத் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து எந்தவித அக்கறையும் எடுப்பதில்லை.

ஆக, தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை, தமிழ் மாணவர்களை திட்டமிட்ட ரீதியில் போதைக்கு அடிமையாக்கி, குடும்பங்களை நிம்மதி இழக்கச் செய்து அவர்களின் வாழ்வைத் தினதும் சீரழிக்கும் திட்டமிட்ட செயற்பாட்டை சிங்கள தேசம் கனகச்சிதமாக நிறைவேற்றிக்
கொண்டிருக்கின்றது.

இதுகூட ஒருவகையில் இனப்படுகொலைதான். ஏற்கனவே நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வழங்காத சிறீலங்காவும் சர்வதேசமும் போதையால் ஏற்படுத்தப்படும் இனப்படுகொலைக்கு எங்ஙனம் தீர்வு வழங்கும்?

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு