தமிழினத்தின் இளைய தலைமுறை ஒரு போதும் வேடிக்கை பார்க்கமாட்டோம்

வியாழன் சனவரி 09, 2020

அண்ணா பல்கலைக்கழகம்:  இன்ஸ்டிட்யூட் ஆப் எமினன்ஸ் (Institute of Eminence) அப்துல்கலாம், வர்கீஸ் குரியன்,  எனும் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்க இருக்கும் நிலையில், சில சந்தேகங்களுக்கு விளக்கங்களும் தீர்வுகளும் இன்றியமையாததாகிறது.

உலக புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மே மாதம் 17 ம் தேதி 1794 ஸ்கூல் ஆப் சர்வேயிங் என பிரிட்டிஷாரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1858ம் வருடம் சிவில் இன்ஜினியரிங் ஸ்கூல் என துவங்கப்பட்டு , அடுத்த வருடமே 1859ம் வருடம் “காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி “என துவங்கப்பட்டது. இது ஐரோப்பா கண்டத்திற்கு வெளியே ஆரம்பிக்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி ஆகும்.

1978ல் கிண்டி பொறியியல் கல்லூரி ‘அண்ணா பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு அதனுடன் A.C காலேஜ் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி குரோம்பேட்டை  ஆகிய கல்லூரிகள் இணைக்கப்பட்டன. இன்றைய பல்கலைக்கழகத்தின் சிறப்புக்கும் , புகழ் மற்றும் பெருமைக்கும் இந்த நான்கு பொறியியல் கல்லூரிகள் மட்டுமே காரணம்.  பின்னர் 2001ம் ஆண்டு தமிழ்நாட்டில் 426 தனியார் பொறியியல் கல்லூரிகள் , 6 அரசு மற்றும் 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் இணைத்து , ஒரு இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.

2007-ம் ஆண்டு நிர்வாக எளிமைக்காக ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நிர்வாகம் நடைபெற்று வந்தது.

2012 ம் ஆண்டில் மீண்டும் எல்லாப் பல்கலைக்கழகமும் ஒன்றிணைக்கப்பட்டு “ அண்ணா பல்கலைக்கழகம் சென்னை “ என இன்று வரை செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 550 தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக புகழ் வாய்ந்த முன்னாள் மாணவர்களாக  திரு. A.P.J அப்துல்கலாம் வர்கீஸ் குரியன், A.C. முத்தையா , பொள்ளாச்சி மகாலிங்கம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் ,வெங்கட் ராகவன் ( முன்னாள் கிரிக்கெட் வீரர் & அம்பயர் ) மற்றும் உலகம் முழுக்க ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் பொறியியல் வல்லுநர்கள் படித்த தமிழ் நாட்டின் சொத்தான அண்ணா பல்கலைக்கழகம் இன்று தமிழக அரசின் கையினை விட்டு நிரந்தரமாக மத்திய அரசின் ஆளுகைக்கு மாற்றப்படுவது நேர்மையற்றது, அறமற்றது. என்னதான் பசப்பு காரணங்களை மத்திய, மாநில அரசுகள் கூறினாலும் நேர்மை கொண்டு நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது சம்மந்தப்பட்டவர்களின் உரிமையாகிறது.

அ)  மத்திய அரசின் கெசட் ரெகுலேஷன் 2017, தேதி 29.08. 2017-ன் செக்ஷன் 4.2.5 -ன் படி , மாணவர்களின் சேர்க்கை, தகுதி அடிப்படையில் தேர்ச்சி (merit based selection) பெற்ற மாணவர்களுக்கு மட்டும் என்கிறது.

சந்தேகம்: தற்போதைய நடைமுறைப்படி +2 மதிப்பெண் அடிப்படையிலா? அல்லது நீட் (NEET) போன்று ஏதேனும் நுழைவுத் தேர்வின் தேர்ச்சி அடிப்படையிலா?

ஆ) செக்ஷன்  4.2.17 (P 17) ன் படி சிறப்பு தகுதி (IOE) பெற்ற பல்கலையின் நிர்வாக அமைப்பு நிதி உதவி அளிக்கும் அரசு நிர்வாக அமைப்பை போல் இல்லாமல் அங்கீகரிக்கும் வகையில் வித்தியாசமானதாய் இருக்க வேண்டும் என்கிறது.

சந்தேகம் 2 : அப்படியெனில் மாநில அரசு இப்பல்கலை நிர்வாக அமைப்பில் பங்கு கொள்ள முடியுமா?

இ) செக்ஷன் 15.0. (P 26) -ன் படி , மாணவர் சேர்க்கையில் தற்போதைய பாராளுமன்றச் சட்டப்படி (Act of Parliament) இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்கிறது.

சந்தேகம் 3 : தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு பின்பற்ற இயலுமா?

ஈ) இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ் (IOE) ) தகுதி பெற்ற டெல்லி பல்கலைக் கழகம் பல காரணங்களுக்காக தன் முடிவை தள்ளி வைத்துள்ளது. ( The Delhi University decided to defer discussion on IOE issue because of the opposition it has received from the members of the  Executive council .Ref. 1st Nov 2019, DV Express)

1. MIT, College of Engineering , School of Architecture, Azhagappa university  - இந்த நிறுவனங்கள் நிலை என்ன?

2. தமிழக மாணவர்கள் 12 வது வகுப்புக்குப்பின்  இளங்கலை பயில நுழைவுக்கான வாய்ப்பு என்ன?

3. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஏதாவது ஒதுக்கீடு உண்டா?

4. மய்ய அரசாங்கம் 500 கோடி தரும் எனவும் , 500 கோடி தமிழ்நாடு மாநில அரசு ஓதுக்கீடு செய்யும் என செய்தி வந்துள்ளது . மய்ய நிறுவனமாக மாற்றிய பிறகு , தமிழ்நாடு 500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இத்தனை வினாக்களுக்கும் முதலில் பதில் சொல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை. தெரிந்தோ, பணிந்தோ தமிழக அரசு மத்திய அரசிடம் அண்ணா பல்கலைகழகத்தை தாரை வார்த்தால் தமிழினத்தின் இளைய தலைமுறைகளான மாணவர்களும் இளைஞர்களும் ஒரு போதும் வேடிக்கை பார்க்கமாட்டோம். எங்கள் மண்ணில் எங்கள் வரிப்பணத்தில் இயங்குகிற ஐ.ஐ.டியில் எங்களின் பூர்வகுடி பிள்ளைகள் படிக்க முடியவில்லை. மீறி ஓரிருவர் படிப்பதற்கு உள்ளே சென்றாலும் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். அப்படியிருக்க அண்ணா பல்கலைக்கழகத்தையும் அபகரித்துவிட்டால் எங்களின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் பிள்ளைகள் எதிர்காலம் என்னாவது? அறிவார்ந்த துணைவேந்தர்கள் எத்தனையோ நபர்கள் தமிழகத்தில் இருக்க, நாம் எல்லோரும் தடுக்க தடுக்க, போராட்டம் வலுக்க வலுக்க கர்நாடகாவை சேர்ந்த துணைவேந்தர் சூரப்பா அவர்களை கொண்டு வந்ததின் சூட்சமத்தை இப்போதாவது புரிந்து கொண்டு தமிழக அரசு ஒருபோதும் மத்திய அரசுக்கு இவ்விடயத்தில் துணைபோகக்கூடாது என்பதனை கேட்டுக்கொண்டு ஒரு வேலை அண்ணா பல்கலைக்கழகம் கைத்தவறினால் உயிரை கொடுத்தேனும் அதனை மீட்கும் போராட்டத்தை மாணவர்களோடு இணைந்து நாங்கள் கையிலெடுக்க வேண்டியது வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நடப்பு கூட்டத்தொடரிலேயே  தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய ஒன்றியம் முழுக்க மாணவர்களும் இளைஞர்களும் ஒன்று கூடி கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக்கொண்டிருக்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தையும், நாட்டின காளைகளுக்கு மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளின் எதிர்காலத்திற்கே முடிவுரை எழுதவிருக்கின்ற  2019 தமிழக அரசு இயற்றிய “தமிழ்நாடு காளை இனவிருத்தி சட்டத்தை” முழுவதுமாக திரும்ப பெறவேண்டுமென்றும் சமீபகாலமாக சிங்கள அரசு இந்திய மய்ய அரசிடம் கட்டாயப்படுத்தி சில ஈழத்தமிழர்களையும் திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஒருசில ஈழப் போராளிகளையும் திரும்ப அழைக்கும் விபரீத முடிவுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது எனவும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.