தமிழகம் முழுவதும் 47 பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி நவம்பர் 13, 2015

சென்னை திருமங்கலம், பெரம்பூர் மேம்பாலங்கள் உட்பட 365 கோடியே 76 லட்சம் ரூபாயில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட 47 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் இன்று நவம்பர் 13 முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,' சென்னை திருமங்கலத்தில் ரூ.60 கோடியே 23 லட்சத்தில் கட்டப்பட்ட 806 மீட்டர் நீள மேம்பாலம், மூலக்கடையில் ரூ.49 கோடியே 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், வியாசர்பாடியில் ஜிஎன்டி சாலையில் ரூ.80 கோடியே 68 லட்சத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இவை தவிர, காஞ்சிபுரம்- மலைப்பட்டி, வேலூர்- சுந்தரம்பள்ளி, திருவண்ணாமலை- மணலவாடியில் ரூ.6 கோடியே 90 லட்சத்தில் 3 புதிய பாலங்கள், சேலத்தில் ரூ.12 கோடியே 92 லட்சத்தில் 5 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கோணப்பாதை உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.7 கோடியே 36 லட்சத்திலும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.23 கோடியே 2 லட்சத்தில் 3 பாலப்பணிகளும் முடிந்துள்ளன.

ஈரோடு மாவட்டம் சித்தாறு, நல்லியம்பாளையம், கொமாரபாளையம் உள்ளிட்ட 8 இடங்களில் ரூ.12 கோடியே 70 லட்சத்தில் புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவை- சுகுணாபுரம், மதுக்கரை, திண்டுக்கல்- முள்ளிப்பாடி, திருச்சி- ஒலையூர், தஞ்சை -துறையூர், பின்னையூர் மற்றும் வெங்கரையில் என ரூ.11 கோடியே 4 லட்சத்தில் 7 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கடலூர், நாகை, புதுக்கோட்டையில் ரூ.10 கோடியே 99 லட்சத்தில் 5 பாலங்கள், விருதுநகர் மற்றும் திருப்பூரில் ரூ.10 கோடியே 70 லட்சத்தில் 5 பாலங்கள், கோவை - கணபதி அருகில் இருவழி மேம்பாலம், இருகூர், ஜமீன் ஊத்துக்குழியில் ரயில்வே மேம்பாலம் என 3 பாலங்கள் ரூ.57 கோடியே 70 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டன.
கட்டி முடிக்கப்பட்டு தயாராக இருந்த பாலங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே இன்று திறந்து வைத்தார்.

இவை தவிர, சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு மற்றும் மேட்டூர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.96 லட்சம் மதிப்பில் அலுவலக கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்வரால் திறக்கப்பட்ட 47 பாலங்கள், கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.365 கோடியே 76 லட்சமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.