தமிழகத்தில் எடப்பாடி அரசு உள்ளவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது!

வெள்ளி ஜூலை 12, 2019

தமிழகத்தில் எடப்பாடி அரசு உள்ளவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்று நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அசோக் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இன்னும் தமிழகத்தில் ஆணவ-ஜாதி கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உயர் நீதிமன்றம்  சமீபத்தில் இதனை கூறியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது ஆணவ-ஜாதிய கொலைகளை ஆதரிப்பது போல் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

ஜாதி-ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மத்திய அரசின் பட்ஜெட் ஏழை- எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய கார்ப்ரேட் நிறுவனங்ளுக்கு சாதகமாக உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சிக்கிறது. இதனை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும். நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஓதுக்கீட்டை அமல்படுத்தாமல் முற்பட்டவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அக்கறை செலுத்துகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் எடப்பாடி அரசு உள்ளவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது. இப்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல் உள்ளது. புதிய கல்வி கொள்கையை கருத்து கேட்காமலேயே அமல்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன்கார்டு, ஒரே மொழி என்றவர்கள் ஒரே கட்சி ஆட்சி முறையை கொண்டு வர பா.ஜ..க. முயற்சிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 33 சதவீத வாக்குகள் விழுந்துள்ளது. அவர்களுக்கு எதிராக 67 சதவீதம் பதிவாகியுள்ளது. எனவே அவர்கள் மக்கள் விரும்பாத திட்டங்களை அமல்படுத்தக்கூடாது. இந்து மனுதர்ம ஆட்சி என்று மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரக்கூடாது.

ஏரி,குளங்களை முறையாக தூர்வாரி பராமரித்தாலே தண்ணீர் தட்டுபாடு வராது.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில நிர்வாகி பத்மாவதி,மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.