தமிழகத்தில் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது!!

திங்கள் செப்டம்பர் 07, 2020

தமிழகத்தில் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால்,அதனை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது: புதிய கல்விக்கொள்கையில் உள்ள நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தமிழகத்தில் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும்.

கல்விக்கொள்கையின் இலக்கை நடப்பாண்டிலேயே தமிழகம் சாதித்து காட்டியுள்ளது. 2035க்குள் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதத்தை 50% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், புதிய கல்விக்கொள்கையின் இலக்கை 2019-2020-ம் ஆண்டிலேயே தமிழகம் எட்டிவிடும்.தேசிய அளவில் 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ள ஆசிரியர்,மாணவர்கள் விகிதாச்சாரம்,தமிழகத்தில் 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ளது.

தேசிய தேர்வுகளுக்கான நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மேலும் சுமையாக இருக்கும்.தேசியதேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஏற்காது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.