தமிழகத்தில் கடும் மழை: வழிந்தோடுகிறது ஆறுகள், மூழ்கியது சென்னை வீதிகள்

வெள்ளி நவம்பர் 13, 2015

வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் கடலோர மாவட்டங்களிலும் வட தமிழக பகுதிகளிலும் மழை அதிகமாக காணப்பட்டது. இந்த கடும் மழை பொழிவினால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் நீரில் மூழ்கி பலர் உயிரிழந்தனர்-விளைநிலங்கள்,வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இந்த நிலையில் நவம்பர் 12 இரவு பெய்த கடும் மழையில் ஒட்டுமொத்த சென்னையும் நீரில் மிதந்து கொண்டிருக்கின்றது. 

அழிக்கப்படும் நீர்நிலைகளால் சென்னைக்கு ஆபத்து

சென்னை வீதிகளில் நீர் மிதந்து கொண்டிருப்பதற்கு முறையற்ற நகர வடிவமைப்பும், நகர பகுதிகளை தொடர்ச்சியாக நீர்நிலைகளை அழித்து வருவதே காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கு குறிப்பிடத்தக்க சாட்சியாக 'சென்னை குடிநீர் வரத்தாக உள்ள போரூர் ஏரியை மூடுவதற்கு திட்டமிட்டதை' அடையாளப்படுத்துகின்றனர்.
அதே சமயத்தில் பல ஆண்டுகளாக வறண்டு இருந்த குளங்களும்,ஏரிகளும்,ஆறுகளும் நிரம்பி வழிந்தோடுகின்றன. குறிப்பாக 22 ஆண்டுகளாக வறண்டு இருந்த பாலாறு சாதாரண நீர் மட்ட அளவிலிருந்து பெருவாரியாக அதிகரித்த நிலையில் பாய்ந்து கொண்டிருக்கின்றது. 

பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
 

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, நவம்பர் 12 நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேரும், மாநிலம் முழுவதும் 48 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நவம்பர் 13 பிற்பகல் கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீட்டிக்கும் 

'குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யலாம். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். தொடர் கனமழைக்கும் வாய்ப்புள்ளது' என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடற்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நிவாரணங்களுக்கான தொலைப்பேசி '1077'
 

சென்னை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிவாரண பணிகளுக்கென மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 10 வட்டங்களில், வருவாய்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இப்பணிகளை விரைவுபடுத்தி கண்காணித்திடவும், சேதங்களை கணக்கிடவும் அனைத்து வட்டங்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு, 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.