தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்!

சனி ஓகஸ்ட் 24, 2019

பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் தற்போது கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோரின் தலைமையில் அனைத்து உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சேலத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

 மாநகரில் உள்ள சுமார் 130-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் வாகன சோதனையின் போது குடிபோதையில் வந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதவிர சந்தேகத்தின் பேரில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 51 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மொத்தம் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் 5-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 3 பேரும் இந்த சோதனையில் சிக்கினர்.

இதுதவிர கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் அவர்களுடைய உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதுதவிர சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் மோப்பநாயுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.