தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

வெள்ளி அக்டோபர் 25, 2019

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் தொடர் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதால், புற நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசு உறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து இருந்தனர். அதன்படி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

காஞ்சீபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனயில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிபுரியாததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் மருத்துவமனை வெறிச்சோடிக்காணப்பட்டது.

நெல்லையில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது. வழக்கமாக காலை பணிக்கு 400 மருத்துவர்கள் வர வேண்டிய நிலையில் 150 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.

முக்கியமான சிகிச்சைகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். புற நோயாளிகள் பிரிவுகளில் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் புறநோயாளிகள் பிரிவுகளில் கூட்டம் குறைவாக இருந்தது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சென்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறார்.