தமிழ்ப் பேரரசு கட்சி ஒருபோதும் இனவாதம் பேசாது.

செவ்வாய் நவம்பர் 17, 2020

தமிழ்ப் பேரரசு கட்சி ஒரு போதும் இனவாதம் பேசாது. அதே நேரத்தில் இனவெறியை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் தமிழ்நாட்டில் எவராவது கலவரம் செய்தால் அவர் எவராக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.

தாய்மை குணம் கொண்டு தமிழர் அறத்தோடு தமிழின உரிமை மீட்பு களத்தில் எவருக்கும் தலை வணங்காமல் போராடிக்கொண்டிருக்கிறோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரத்தம் சிந்தி கத்திப்பாரா பாலத்தில் போராடி சிறை சென்று எண்ணற்ற பொய் வழக்குகளை சுமந்து எத்தனையோ முறை சிறை பட்டும் கொஞ்சம் கூட அசராமல் ஓய்வற்று ஓடிக்கொண்டிருக்கிறோம். தமிழினம் தலைநிமிர்ந்து வாழவும் தமிழர் நிலத்தில் வாழும் அனைத்து குடி, மத, இன மக்களுக்கு ஒரு பெரும்  பாதுகாப்பு அரணை உருவாக்கவும் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கல்வி உரிமை இழந்து வேலை உரிமை சிதைக்கப்பட்டு வாழ்வியல் உரிமை அழிக்கப்பட்டு தமிழினம் நினைத்துப் பார்க்க முடியாத ரணத்தை சுமந்து கொண்டிருக்கிற இவ்வேளையில்  "வேல் யாத்திரை" என்கிற பெயரில் எங்கள் தாய்மொழி தமிழ் மொழிக்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் எங்களை அழிக்க நினைக்கிற கூட்டத்தோடு கைகோர்த்துக்கொண்டு எங்கள் தமிழ் கடவுள் முருகனின் வேலை கையிலேந்தி தமிழ் மண்ணில் ஒரு பெரும் ரத்தக்களறியை உருவாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட "வேல்  யாத்திரையை" சமரசமின்றி அறம் கொண்டு நாங்கள் எதிர்த்தோம். தமிழர் கடவுளான முருகனின் வேலை கையிலெடுத்த பிஜேபி எல்.முருகன் எச். ராஜா, பிரசாத், விபி துரைசாமி ஆகியோர்களை ஆய்வு செய்யும்போது நேர்மையற்ற அவர்கள் தமிழர் அல்லாதவர்கள் என்று தெரிந்த நிலையில் எங்கள் தமிழ் சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு தார்மீக கடமையாகிறது. இவர்களில் யார் யார் எந்த தாய்மொழியை கொண்டவர்கள் என்று தெரிந்தும் அவர்கள் தனிப்பட்ட சமூகத்தையோ அவர்களின் தாய் மொழியையோ நாங்கள் குறிப்பிடாமல் நாகரீகம் காத்து தமிழர் அல்லாதவர்கள் என்று மட்டுமே எங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தோம்.  

எந்த சூழ்நிலையிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தை நாங்கள் தாக்க மாட்டோம். யாரோ ஓரிருவர் தவறு செய்யும் சூழலில் அவர்கள் சமூகத்தை கறைப்படுத்துவது எங்கள் நோக்கமும் அல்ல அது தமிழர் அறமும் அல்ல. எல் முருகன் அவர்களையும் வி.பி. துரைசாமி அவர்களையும் iஅவர்கள் எங்கள் சமூகம்தான் நாங்கள் பூர்வகுடி தமிழர்கள் எங்களை எப்படி தமிழர் அல்லாதவர்கள் என்று நீங்கள் இன வெறியோடு பேச முடியும்" என்று வி.பி.துரைசாமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னிடம் பேசினார்கள்.  அவர்களிடம் நான் - சம்மந்தப்பட்டவர்கள் தாங்களே தமிழர் அல்ல தாங்கள் வேற்று மொழியை சார்ந்தவர்கள் என்று பெருமை பொங்க பேசி தமிழ்நாட்டில் பிஜேபியை வளர்த்துவிட்டு 20 சட்டமன்ற உறுப்பினர்களாவது வெற்றிபெற்று நாம் கோட்டைக்கு செல்ல வேண்டுமென்று வி.பி.துரைசாமி அவர்கள் பேசிய காணொளியை அந்த தம்பிகளுக்கு அனுப்பி இப்படி பேசி இருப்பவர்களைதான் நான் சொன்னேன். அதுவும் அவர்கள் தனிப்பட்ட முறையில் பேசியது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, இப்படி பேசியவர்கள் எங்கள் தமிழ் மண்ணில் கலவரம் ஏற்படுத்தி தமிழர்களிடையே ரத்த சகதியினை உண்டு பண்ணுகிற சதித் திட்டத்தோடு வருகிறார்கள் என்று கூறி இப்படிப்பட்டவர்களைத்தான் நாங்கள் அம்பலப்படுத்தினோம், இவர்களுக்காக நீங்கள் பரிந்து பேசி உங்களையும் அவர்களோடு இணைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தனிப்பட்ட சமூகத்திற்கு நாளைக்கும் ஒரு ஆபத்து என்றால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்னை புரிந்து கொள்ளுங்கள்  என்றேன்.  அந்த தம்பிகளில் ஓரிருவர் மீண்டும் மீண்டும் பேசிய பேச்சில் என்னை எவ்வளவு தூரம்  புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. 

ஆடு மாடு புல் பூண்டு மரம் செடி கொடிகள் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானது தமிழ் தேசியம் என்பதை எங்களின் உயிரில் எழுதி வைத்துக்கொண்டு அறத்தோடு போராடிக் கொண்டிருக்கிறோம். சாதி மதம் இனம் என ஒரு போதும் பிரித்தாள மாட்டோம். அதே சூழலில் சாதி மதம் இனம் கொண்டு பிரித்தாள நினைத்தால் அவன் எமனாக இருந்தாலும் விடமாட்டோம்.

மீண்டும் சொல்கிறோம் தாய்மொழி தமிழை பேசுகிற எங்கள் இனத்தில் பிறந்திருந்தாலும் சரி தமிழர் அல்லாத பிற மொழி பேசுகிற இனத்தில் பிறந்திருந்தாலும் சரி  ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழினத்தில், தமிழர் நிலத்தில் எவனாவது கலவரம் செய்த நினைத்தால் ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம். எங்கள் மொழி காக்க, இனம் காக்க, நிலம் காக்க, வளம் காக்க, அறுந்து போகாத நம்பிக்கையோடு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்போம்.

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.

வெல்வோம்.

குறிப்பு: நாங்கள் தமிழர் அல்ல என்று சொல்லாமல் சொல்லி எங்கள் தமிழர் கடவுள் முருகனின் வேலை கையில் ஏந்தி பிஜேபி தலைவர் எல்.முருகன் அவர்களோடு கைகோர்த்து "வேல் யாத்திரை" செய்த எல்.முருகளின் உறவினர் வி.பி.துரைசாமி அவர்களின் பேச்சினை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல மனிதம் மதிக்கும் அனைவருக்கும் பகிர்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
"சோழன் குடில்"
 

இணைப்பு :