தமிழ்ப் பெயரையே பிள்ளைகளுக்குச் சூட்டுவோம்

ஞாயிறு மே 03, 2020

தமிழர்களே வணக்கம்.

நேற்று (02-05-2020)சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவரும் ஈழத்து உறவுகளுக்கு,நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தோம்.

அப்பொழுது நான் அவர்களின் பெயர் பட்டியலைப் பார்த்தேன்.கிட்டத்தட்ட எல்லாப் பெயர்களுமே சமற்கிருதப் பெயர்கள்.ஈழ மக்களின் பெயர்களில் தமிழ் இல்லாதது பெரும் கவலையை தந்தது.

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்க வேண்டும். அப்படியென்றால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது தானே சிறந்தது. பிற மொழிப் பெயர்களை குழந்தைக்கு வைப்பதால், தமிழ்த் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். சுயமற்ற குழந்தையாக வளரும்.

பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின் ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர் பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. இன்று தெருப்பெயர்கள் கூட தமிழில் இல்லை. தமிழர்கள் வணங்கிய கடவுள்களின் பெயரையெல்லாம் மெல்ல மெல்ல பெயர் மாற்றினார்கள். அருள்மிகு என்கிற அழகுத் தமிழ் செத்து   ஆனது பெரும் வேதனை.

20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் மீண்டும் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழிப் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் என்றுமே துய தமிழ் பெயர்களையே (பெரும்பாலும்)இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம். தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்றோர் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

ஆகவே தமிழர்களே " தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தூயத் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்.

இனித் தமிழ்ப் பெயரையே பிள்ளைகளுக்குச் சூட்டுவோம்.ஏற்கனவே சூட்டியப் பிற மொழிப் பெயரை உடனே மாற்றுவோம் என உறுதியேற்போம்.
நன்றி.

தமிழராய் ஒன்றிணைவோம்.
தமிழர் தேசம் படைப்போம்.

-சோழன் மு.களஞ்சியம்.
தமிழர் நலப் பேரியக்கம்.