தமிழர் தாயகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள்

சனி ஜூன் 29, 2019

தமிழர் தாயகத்தில் மாவீரர் குடும்பங்கள் அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

இவர் செந்தீபன் கலைச்செல்வி. குமிழமுனை 6 ஆம் வட்டாரத்தில் வசிக்கின்றார். மாவீரரின் மனைவி. இறுதி யுத்தத்தில் இவரது கணவர் செந்தீபன் வீரச்சாவடைந்தார். 

இவருக்கும் ஒரு கையும் ஒரு காலும் இல்லை. இரு பிள்ளைகளுடன் தனது தாயாரது பராமரிப்பில் இருக்கின்றார். இறுதி யுத்தத்தில் அகப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் வாழ்கின்றார். 

1984 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பேர்து 35 வயது. தாயகம் மீட்புப் போருக்கு கணவனை அனுப்பி அவர் வீரச்சாவடைந்த நிலையில், இன்றும் உறுதி தளராமல் வாழ்வதற்காகப் போராடுகின்றார். 

இவர் தனது பிள்ளைகளைக் கல்வி கற்பிப்பதற்கு புலம்பெயர் உறவுகளிடம் உதவிக் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார். 

இவரைப் போன்றுதான் ஏராளமான மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், விழுப்புண் அடைந்த முன்னாள் போராளிகள் போன்றோர் அரச அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்ட நிலையில் உதவிகள் இன்றி வாழ்கின்றனர். 

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் போராளி குடும்பம், மாவீரர் குடும்பங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. தேசியத் தலைவரின் நெறிப்படுத்தலில் நேர்த்தியாக இப்பணி இடம்பெற்றது. 

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர்களைக் கவனிப்பதற்கு எவரும் இன்றி கைவிடப்பட்டிருக்கின்றனர். 

இவர்களுக்கு உதவி செய்யவேண்டியது புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு தமிழர்களின் பணி என்பதையும் நினைவூட்டுகின்றோம்.