தமிழர் தேசம் ஆழமாக நேசித்த யோசப் ஆண்டகை!

வெள்ளி ஏப்ரல் 02, 2021

 நெடுந்தீவில் 16.04.1940 அன்று பிறந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தனது 80 ஆவது அகவையில் வியாழக்கிழமை அதிகாலை யாழ் மண்ணில் 01.04.2021 இல் மண்ணை விட்டு மறைந்தார்.

அவருக்கான வீரவணக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை 02.04.2021 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: தமிழிசைக் கலாமன்றம் (1120 Tapscott Rd, Unit 3, Scarborough, ON M1X 1E8)
காலம்: வெள்ளிக்கிழமை 02.04.2021 (April 2nd, 2021)
நேரம்: மாலை 6 மணி தொடக்கம் 9 மணிவரை

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 1,46,679 தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டவர்களாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற துல்லியமான கணக்கை துணிச்சலாக சர்வதேசத்திற்கு வெளிக்கொணர்ந்தார். இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழினத்திற்கு நீதி கேட்டு உலகத் தமிழ் மக்களைத் திரட்டிப் போராடியவர். மன்னார் மறைமாவட்ட ஆயராக அவர் அருட்பணியாற்றிய காலப்பகுதியில்,  சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலையை உலகுக்குச் சொல்லி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின்  உண்மையான அவலங்களை உரத்து உலகறியச் சொன்னவர்.

வடக்குஇ கிழக்கில் போர்ச் சூழலால் இடம் பெயர்ந்த தமிழ்மக்களின் துரித மீள் குடியேற்றத்திற்காகவும் இடர் களைவுப் பணிகள் ஆற்றவும் பல வழிகளிலும் அரும் பாடுபட்டு பணியாற்றியவர். சிறிலங்காச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்  கைதிகளை அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு தொடர்பு பேணி ஆறுதலளித்ததோடு அவர்களின் விடுலைக்காகக் வலிமையாகக் குரல் கொடுத்தவர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி சுமந்த போராட்டங்களிற்கு நீதி வேண்டி வலுவாகக் குரல் கொடுத்தவர்.

2013 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் சாட்சியமாகத் திகழக் கூடிய மனிதப்புதைகுழி தொடர்பாக கூறுகையில்  "இதுகுறித்த இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! எனவே அது குறித்து அனைத்துலக விசாரணை தேவை!" என்று குரல் கொடுத்தவர்.

மானிட அநீதிக்கெதிராக  குரல் எழுப்பி இனப்படுகொலையாளிகளான அரசோடு மானிட நேயப் போராளியாக பல வழிகளிலும் அயராமல் எதிர்த்து போராடியவர். பிற் போடப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்று முழங்கியவர்.

2016  ஜனவரியில், ஆண்டகை அவர்கள் தனது 75 ஆவது வயதில் ஆயர் பணியிலிருந்து உடல் நலக் குறைவினால் திடீரென ஓய்வு பெற்ற போதே தமிழினம் கவலைகொண்டது.

அவர் பதவி வகித்த காலத்தில் தமிழர் தாயகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தவறாமல் ஆண்டகை இராயப்பு ஜோசப்பையும் சந்தித்தே சென்றிருக்கின்றனர். அவ்வேளைகளில் தமிழ் மக்களிற்காக குரல் கொடுத்ததற்காக அவர் எதிர் நோக்கிய உயிர் அச்சுறுத்தல்கள் ஏராளமானாலும்  அவற்றிற்குத் துளியும் அஞ்சாமல் எவரிற்கும் அடிபணியாது தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்தார். ஆண்டகையினது இழப்பு முழு ஈழத்தமிழருக்குமே  இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு.

தேசியத் தலைவர் மீதும் தமிழ் மக்கள் மீதும் பெரும் பற்றுறுதி வைத்துப் பணியாற்றிய ஆண்டகையின் பிரிவில் ஆற்ற முடியாத துயரில் தவிக்கும் தமிழ் உறவுகளிற்கு கண்ணீர் சுமந்த ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி,

கனடியத் தமிழர் சமூகம், கனடிய தமிழ் மாணவர் சமூகம்.
தொடர்புகளுக்கு: 416.830.7703 | 416.662.2326