தமிழர் தேசம், இனவழிப்பிற்கான நீதி – சுவிஸ் அரசு ஏற்பாடு செய்த மாநாட்டில் வளைந்து கொடுக்க மறுத்த புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

தமிழர் தேசம், இனவழிப்பிற்கான நீதி தேடல் ஆகிய நிலைப்பாடுகளைக் கைவிட்டு மாற்று வழிகளில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுவிற்சர்லாந்து அரசாங்கம் வழங்கிய ஆலோசனைகளை மக்கள் ஆதரவு பெற்ற புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் அடியோடு நிராகரித்துள்ளனர்.

 

ஈழப்பிரச்சினையில் நோர்வேயின் நடுநிலை பாகம் கேள்விக்குறியாக மாறியிருக்கும் பின்புலத்தில், நோர்வேயின் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சிகளில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாகத் திரைமறைவில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

 

இந்த வகையில், கடந்த 2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு முன்னோடியாக அமைந்த சிங்கப்பூர் ஒன்றுகூடல் போன்று, அடுத்த மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் இடம்பெறும் நிலையில் அதற்கு முன்னோடியாக கடந்த 18.10.2019 முதல் 20.10.2019 வரையான மூன்று நாட்கள் சூரிச் நகரில் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுக்கான மாநாடு ஒன்றை சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சு நடாத்தியிருந்தது.

 

இதன்பொழுது தமிழர் தேசம் என்ற அடிப்படையில் தமது அரசியல் செயற்பாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுப்பது இனவாதத்தின் வெளிப்பாடாகக் கருதப்படும் என்றும், இதனை விடுத்து சிறீலங்கன்கள் என்ற அடையாளத்தை ஏற்று தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகளுக்காகவும் தமிழர்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சின் இராசதந்திரிகள் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினர்.

 

அத்துடன் இனவழிப்பிற்கான நீதி தேடல் என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் நிற்பதாலோ, அல்லது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவின் முன்னாள், இந்நாள் பாதுகாப்புத் தரப்பினரை முன்னிறுத்த முற்படுவதாலோ தமிழர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்றும், புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளிடம் சுவிற்சர்லாந்து அரசாங்கத்தால் களமிறக்கப்பட்டிருந்த சட்டத்துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.

 

எனினும் இதனை அடியோடு நிராகரித்த மக்களின் ஆதரவைப் பெற்ற புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள், தமிழர் தேசம் என்ற விடயத்தில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை என்பதை இடித்துரைத்ததோடு, இனவழிப்பிற்கு நீதி தேடுவதற்கான முயற்சிகளையோ, அன்றி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது எதிர்காலத்தில் ஐ.நா.வின் உப அமைப்பாக உருவாகக்கூடிய பன்னாட்டுத் தீர்ப்பாயம் ஒன்றில் சிறீலங்காவின் முன்னாள், இந்நாள் பாதுகாப்புத் தரப்பினரை முன்னிறுத்தும் முயற்சிகளைக் கைவிடப் போவதில்லை என்று ஆணித்தரமாகக் கூறினர்.

 

Emmanuel
படம்: கோப்பு (இனப்படுகொலையாளி சந்திரிகா குமாரதுங்கவுடன் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண.பிதா இம்மானுவேல்)

 

பதினெட்டு அமைப்புக்களைச் சேர்ந்த இருபது புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம் மாநாட்டில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரின் தலைமையில் இயங்கும் மக்கள் ஆதரவற்ற அமைப்பு ஒன்றின் பிரதிநிதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கிய உறவைப் பேணும் கனடாவைச் சேர்ந்த இன்னுமொரு மக்கள் ஆதரவற்ற அமைப்பின் பிரதிநிதியுமே, தமிழர் தேசம் என்ற நிலைப்பாட்டைக் கைவிட்டுக் கருத்துரைகளை வழங்கியதோடு, ஈழத்தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பதில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் அபத்தமான கருத்துக்களையும் மேற்கொண்டிருந்தனர்.

 

CTC-TNA
படம்: கோப்பு (கனடிய தமிழ் காங்கிரஸ் கூட்டத்தில் இரா.சம்பந்தன், சுமந்திரன்)

 

எனினும் இக்கருத்துக்களை அடியோடு நிராகரித்து, தமிழர் தேசம், இனவழிப்பிற்கான நீதி தேடல் ஆகிய விடயங்களில் ஏனைய பதினாறு அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுதியாக நின்றதோடு, மேற்குலகம் தமிழர்களைக் கைவிட்டால், சீனாவுடனான இராசதந்திர உறவைத் தமிழர்கள் ஏற்படுத்துவார்கள் என அறிவித்ததோடு, தமிழர்களின் வெளியுறவுக் கொள்கை எதிர்காலத்தில் வெறுமனவே இந்தியாவையும், மேற்குலகையும் மட்டும் மையப்படுத்தியதாக அல்லாது, சீனா, ரசியா உள்ளடங்கலான பல தரப்புக்களுடன் இராசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் கொள்கையாக மேம்படும் என்றும் எச்சரித்தனர்.

 

அத்தோடு, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் தமக்கு இருக்கக்கூடிய வாக்குபலத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்தித் தமது அடுத்த வியூகங்களைத் தமிழர்கள் மேற்கொள்வார்கள் என்றும் மக்கள் ஆதரவு பெற்ற புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.