தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய மாவீரர்களுக்கு மக்கள் அனைவரும் வணக்கம் செலுத்த வேண்டும்

செவ்வாய் நவம்பர் 26, 2019

வடக்கு - கிழக்கில் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் சுந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் தமது உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் எப்போதும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மாவீரர்களுக்கு மக்கள் அனைவரும் வணக்கம்

தமிழீழ மாவீரர் தினம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களைஈகம்  செய்த விடுதலைவீரர்களை நினனவுகூர்ந்து நினைவுநாள் அனுஸ்டிப்பது வரலாற்றுக் காலம் தொட்டு உலகம் பூராகவும் மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாக காணப்படுகின்றது.

விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் சார்ந்த ஒரு ஒட்டு மொத்தமக்கள் கூட்டமும் வருடாவருடம்  நினைவு நாளை அனுஸ்டிப்பது அந்த விடுதலை வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூருவதற்கு மட்டுமன்றி அவர்களின் உறவினர்களின் உள்ளக் குமுறல்கள் மற்றும் வேதனைகளுக்கான ஒரு ஆறுதலை அளிப்பதற்கும் வழிவகுக்கிறது.   

மாவீரர்களுக்கு மக்கள் அனைவரும் வணக்கம்

ஆனால், யுத்தம் நடைபெற்ற போது தமது உயிர்களை நீர்த்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 

இருந்த போதிலும், சட்டம் ஒழுங்குமற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக கார்த்திகை மாத நினைவு கூரலை எமது மக்கள் செய்துவருகிறார்கள்.

நாளை 27 ஆம் திகதி வடக்கு - கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவுநாள்  நிகழ்வுகள் அமைதியான முறையில் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அமைதியான வழியில் உரிய சட்டவழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். 

மாவீரர்களுக்கு மக்கள் அனைவரும் வணக்கம்

நாட்டில் நிலையான சமாதானத்தையும், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடப்போவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பர் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.