தமிழர்களுக்கான நீதியை பிரித்தானியா மறுக்கின்றதா?

புதன் பெப்ரவரி 06, 2019

இலங்கைத் தீவை தமது காலனித்துவமாக வைத்திருந்த பிரித்தானியா, இரண்
டாம் உலகப் போரின் பின்னரான 1948ம் ஆண்டு இரு தேசிய இனங்கள் வாழ்ந்த இலங்கைத் தீவை பெரும்பான்மையாகக் கொண்ட  சிங்கள, பெளத்த பேரினவாதிகளிடம் சட்டபூர்வமாக கையளித்துவிட்டு வந்ததால் இன்று வரை தமிழ் மக்கள் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை சிங்கள தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடும் அதேவேளை, தமிழினம் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட இனமாக இன்றும் அங்கு அடிமைப்பட்டு வாழ்கின்றது. அதனால்தான் பிரித்தானியா சிறீலங்காவிற்கு வழங்கிய சுதந்திர நாளை தமிழ் மக்கள் ஒரு கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

2009ம் ஆண்டு இடம்பெற்ற பேரழிவின் பின்னர் தங்களுக்கான நீதி மறுக்கப்பட்ட இனமாக இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்த தேசங்கள் எங்கிலும் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த மக்களின் அவலங்களுக்கு காரணமான, இந்த இனச்சிக்கலை காத்திரமான பங்களிப்புடன் தீர்த்துவைக்க வேண்டிய  தார்மீக பொறுப்பைக் கொண்ட பிரித்தானியா, அதனைச் செய்யத் தவறிவிட்டது.

விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதிலும், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சிறீலங்காவிற்கு உதவுவதிலும் காட்டிய அக்கறையை தமிழ் மக்கள் அந்தத் தீவில் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதில் பிரித்தானியா காண்பிக்கவில்லை.

இப்போது சிறீலங்காவிற்கு ஆதரவாக இன்னொரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சிறீலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இலண்டனிலுள்ள சிறீலங்காத் தூதரகத்துக்கு முன்னால் பிரித்தானியா வாழ் தமிழர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது, சிறீலங்காத் தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியும் சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் தளபதியுமான பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ, தூரகத்துக்கு வெளியே வந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை தனது செல்பேசியில் படம் பிடித்ததுடன், அவர்களைப் பார்த்து, கழுத்ததை வெட்டுவேன் என்ற கைகளால் செய்துகாட்டி கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.

ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் பிரித்தானியாவில், ஜனநாயக வழியில் போராடிய தமிழ் மக்களை நோக்கி இலங்கையில் இனப்படுகொலை செய்ததுபோல் படுகொலை செய்யப்போவதாக மிரட்டிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுதொடர்பாக சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் பெப்ரவரி மாதம் 6ம் திகதி இலண்டனில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்
டோவை சிறப்பு கலந்துரையாடலுக்காக எனக்கூறி கொழும்புக்குத் திருப்பி அழைத்த சிறீலங்கா, பின்னர் அவரை இலண்டன் தூதுரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கியதுடன், சீனாவுக்கு சிறப்புப் பயிற்சிகளுக்காக அனுப்பியிருந்தது.

அதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவரான பிரியங்கா பெர்ணான்டோ குறித்த வழக்கில் சமூகமளிக்கவேண்டுமென இலண்டன் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால், அவரோ அல்லது அவர் தரப்பிலிருந்து எவரும் நீதிமன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.

அவர்களின்றியே இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் முடிவு சிறீலங்காவின் 71வது சுதந்திர தினத்திற்கு சில தினங்கள் முன்பாகவே வெளியாகியது. பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை, குற்றவாளியயன இனங்கண்ட இலண்டன் ‡ வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், அவருக்கு எதிராகப் பிடியாணையைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவு, பிரித்தானியாவின் அனைத்துப் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த அதிகாரி, பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் எச்சர்ந்தப்பங்களிலும் கைது செய்யும் நிலையும் ஏற்பட்டது. தமிழ் மக்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் மனநிறைவை ஏற்படுத்தியிருந்தது.

உடனடியாகக் களமிறங்கிய சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரித்தானியாவை வலியுறுத்தியது. சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, சிறீலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசை நேரில் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இராஜதந்திர முகவராக செயற்பட்டுவந்தவர். இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்தார். எனவே அவருக்கு இராஜந்திர விலக்குரிமையும், சிறப்புரிமைகளும் உள்ளது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சின் செயலார் எடுத்துக்கூறியுள்ளார். அத்துடன், பிரிகேடியர் பிரியங்க வழக்கு ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயகப் பணியகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் சிறீலங்கா கூறியது.

இந்த வழக்கு கடந்த 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், அரசாங்கம், பிரித்தானிய வெளிவிவகார பணியகத்திடம் எதிர்ப்பையும் வெளியிட்டது.

ஆனாலும், இலண்டன் ‡ வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக இனம்கண்டு பிடியாணையைப் பிறப்பித்தது.  

ஆனால் தற்போது அந்தப் பிடியாணை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் தலையீடு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதுவுமின்றி பிடியாணை இரத்துச்செய்யப்பட்டது என இலண்டன் ‘கார்டியன்’ தெரிவித்துள்ளது. பிரியங்க பெர்ணான்டோவிற்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் காணப்பட்ட இராஜதந்திர விடுபாட்டுரிமை குறித்து பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்துடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டபின்னர், பிரதம நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி அவசர அவசரமாக தனது உத்தரவை இரத்துச்செய்துள்ளார் என ‘கார்டியன்’ தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கான நீதியை பிரித்தானியாவும் வழங்க மறுக்கின்றதா? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

தமிழர்கள் மீது இலங்கையில் படுகொலைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா, எல்லைதாண்டி விடுத்த படுகொலை எச்சரிக்கையை பிரித்தானிய அரசு இராஜதந்திர விதிமுறைகளுக்குள் உள்ளடக்கி இரத்துச் செய்துள்ளது. இது இராஜதந்திரிகள் எல்லைதாண்டி படுகொலை எச்சரிக்கைகளை வெளியிடமுடியும்.

அவ்வாறு வெளியிட்டாலும் அவர்களை எதுவும் செய்யமுடியாது என்ற நிலையையே தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெறக் கூடாது என்று வலியுறுத்தி இலண்டனில் கடந்த 2ம் திகதி சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. குறித்த வழக்கிற்காக நீதிமன்று மீண்டும் கூடியிருந்த நிலையில், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், யுத்தக் குற்றவாளியான பிரிங்க பெர்னாண்டோவை கைது செய் என்று வலியுறுத்தியதுடன், தமிழினத்தின் மேலான சர்வதேசத்தின் அநீதி இது என்றும் கோசங்களை எழுப்பியிருந்தனர். இதேவேளை, இந்த முடிவிற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கும் தமிழர் தரப்பு தயாராகிவருவதாக தெரியவருகின்றது.

-வெற்றிநிலவன்-

நன்றி: ஈழமுரசு